அடுத்த ஐந்தாண்டுகள் ஆக வெப்பமானதாக இருக்கும்: ஐநா

அடுத்த ஐந்தாண்டுகள் ஆக வெப்பமானதாக இருக்கும்: ஐநா

2 mins read

2023 முதல் 2027 வரை­யி­லான ஐந்து ஆண்டு கால­கட்­டம் இது­வரை இல்­லாத அளவு ஆக வெப்ப­மா­ன­தாக இருக்­கும் என்று ஐக்­கிய நாட்டு நிறு­வ­னம் எச்­ச­ரித்­துள்­ளது. கரி­ய­மில வாயு வெளி­யேற்­றம், 'எல் நினோ' வானிலை நிகழ்வு கார­ண­மாக வெப்­ப­நிலை உயர்­ந்து வருகிறது.

உல­க­ள­வில் வெப்­ப­நிலை, பாரிஸ் பரு­வ­நிலை உடன்­பாட்­டில் நிர்­ண­யிக்­கப்­பட்ட இலக்கை விரை­வில் தாண்­டக்­கூ­டும்.

அடுத்த ஐந்து ஆண்­டு­களுக்குள் இது நிகழ மூன்­றில் இரண்டு பங்கு சாத்­தி­யம் நிலவு­வதாக ஐநாவின் உலக வானிலை ஆய்வு அமைப்பு நேற்று தெரி­வித்­தது.

இது­வரை ஆக அதிக வெப்­ப­மான எட்டு ஆண்டு கால­கட்­டம் 2015க்கும் 2022க்கும் இடை­யே­தான் பதி­வா­னது. எனி­னும், பரு­வ­நிலை மாற்­றம் வேகம் எடுத்­துள்­ள­தால் வெப்­ப­நிலை மேலும் அதி­க­ரிக்­கும் என முன்­னு­ரைக்­கப்­ப­டு­கிறது.

"அடுத்த ஐந்து ஆண்­டு­களில் குறைந்­தது ஓராண்­டும் ஐந்து ஆண்டு கால­கட்­டம் முழு­வ­தும் இது­வரை இல்­லாத அளவு ஆக வெப்­ப­மா­ன­தாக இருக்க 98 விழுக்­காடு சாத்­தி­யம் உள்­ளது," என்று வானிலை ஆய்வு அமைப்பு கூறி­யது.

கடந்த ஆண்டு உல­கம் முழு­வ­தும் பதி­வான சரா­சரி வெப்­ப­நிலை, 1850க்கும் 1900க்கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் பதி­வான சரா­சரி வெப்­ப­நி­லை­யை­விட 1.15 டிகிரி செல்­சி­யஸ் அதி­க­மாக இருந்­தது.

"வரும் மாதங்­களில் எதிர்­பார்க்­கப்­படும் எல் நினோ வானிலை நிகழ்­வும் மனி­த­னால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பரு­வ­நிலை மாற்ற­மும் சேர்ந்து உல­க­ள­வில் வெப்ப­நி­லையை உயர்த்­தி­வி­டக்­கூடும்," என்று அமைப்­பின் தலை­வர் பெட்­டேரி தாலஸ் குறிப்­பிட்­டார்.

"உடல்நலம், உண­வுப் பாது­காப்பு, நீர் மேலாண்மை, சுற்­றுப்­பு­றத்­துக்கு இது மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்துகிறது. இதற்கு நாம் தயா­ராக இருக்க வேண்­டும்," என்று அவர் எச்­ச­ரித்­தார்.

ஜூலை இறு­திக்­குள் 'எல் நினோ' ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யம் 60 விழுக்­காடு என்­றும் செப்­டம்­பர் இறு­திக்­குள் அது நிகழ்­வதற்­கான சாத்­தி­யம் 80 விழுக்­காடு என்றும் வானிலை ஆய்வு அமைப்பு முன்­ன­தா­கக் கூறி­ இருந்­தது.

அலாஸ்கா, தென்­னாப்­பிரிக்கா, தெற்­கா­சியா, ஆஸ்­திரே­லி­யா­வின் சில பகு­தி­க­ளைத் தவிர்த்து, 1991 முதல் 2020 பதி­வான சரா­சரி வெப்­ப­நி­லை­யை­விட இவ்­வாண்டு வெப்­ப­நிலை அதி­க­மாக இருக்­கக்­கூ­டும் என்று அமைப்பு சொன்­னது.