49,500 குடும்பங்களுக்கு $1.56 பி. வழங்கப்பட்டது

49,500 குடும்பங்களுக்கு $1.56 பி. வழங்கப்பட்டது

2 mins read

2019ல் அறிமுகம் கண்ட மேம்படுத்தப்பட்ட மத்திய சேம நிதி வீடமைப்பு மானியம்

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் (வீவக) கடந்த ஆண்டு 18,000 குடும்­பங்­க­ளுக்கு $564 மில்­லி­யன் பெறு­மா­ன­முள்ள மேம்­ப­டுத்­தப்­பட்ட மத்­திய சேம நிதி வீட­மைப்பு மானி­யங்­களை வழங்­கியது.

2019ல் இந்த மானி­யம் அறி­மு­கம் செய்­யப்­பட்­ட­தில் இருந்து மொத்­தம் $1.56 பில்­லி­யன் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மானி­யம் குறித்து நேற்று தக­வல் வெளி­யிட்ட வீவக, 2019 செப்­டம்­ப­ரில் இருந்து தங்­கள் முதல் வீட்டை வாங்­கிய 49,500 குடும்­பங்­கள் இந்த மானி­யத்­தின் மூலம் பல­ன­டைந்து உள்­ள­தா­கக் கூறி­யது.

மானி­யத்­தைப் பெற்ற குடும்­பங்­க­ளின் எண்­ணிக்­கை­யும் மானி­யத்­தின் அள­வும் 2019லிருந்து ஒவ்­வோர் ஆண்­டும் அதி­க­ரித்­துள்­ள­தாக வீவக தெரி­வித்­தது. விற்­ப­னைக்கு விடப்­படும் வீடு­க­ளின் எண்­ணிக்­கை­யும் மானி­யத்­துக்கு தகு­தி­பெ­று­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து இருப்­பது இதற்­குக் கார­ணம்.

தங்­கள் முதல் புதிய அல்­லது மறு­விற்­பனை வீட்டை வாங்­கும் குறைந்த, நடுத்­தர வரு­மான குடும்­பங்­க­ளுக்கு $80,000 வரை மானி­யம் வழங்­கப்­ப­டு­கிறது.

2019 செப்­டம்­ப­ரில் இருந்து டிசம்­பர் வரை ஏறத்­தாழ 1,500 குடும்­பங்­கள் $42 மில்­லி­யன் பெறு­மா­ன­முள்ள மானி­யங்­களைப் பெற்­றுக்­கொண்­ட­ன.

2020ல் 14,000 குடும்­பங்­கள் $454 மில்­லி­யன் மதிப்­பி­லான மானி­யங்­க­ளைப் பெற்­றுக்­கொண்­ட­னர். 2021ல் 16,000 குடும்­பங்­கள் $499 மில்­லி­யன் மதிப்­பு­டைய மானி­யங்­க­ளைப் பெற்­றுக்­கொண்­ட­ன.

"வலு­வான தேவைக்கு மத்­தி­யில் வீவக வீட்டு விலை கட்டுப்­ப­டி­யாக இருப்­பதை உறுதி­செய்ய அர­சாங்­கம் வழங்கி­வரும் ஆத­ர­வின் ஒரு பகு­தி­யாக இந்த மானி­யம் அமை­கிறது," என்று வீவக கூறி­யது.

மானி­யத்­தைப் பெற்­றுக்­கொண்ட 49,500 குடும்­பங்­களில் 28,400 குடும்­பங்­கள் வீவ­க­வி­டம் இருந்து வீட்டை வாங்­கின. தேவைக்­கேற்ப கட்டி விற்­கப்­படும் வீடு (பிடிஓ), எஞ்­சிய வீட்டு விற்­பனை, பொது முன்­ப­திவு மூலம் அவை வீட்டை வாங்­கின.

எஞ்­சிய 21,100 குடும்­பங்­கள் மறு­விற்­பனை வீட்டை வாங்­கி­ன.

பிடிஓ வீடு­க­ளுக்­கான மானி­யம், சந்தைத் தள்­ளு­ப­டி­யைச் சேர்க்­கை­யில், கடந்த ஆண்டு முதிர்ச்சி அடை­யாத பேட்­டை­களில் புதிய வீடு வாங்­கி­ய­வர்­களில் 90 விழுக்­காட்­டி­னர், வீட்டுக் கட­னைச் செலுத்த தங்­கள் மாத வரு­மா­னத்­தில் கால்­வாசி அல்­லது அதற்­கும் குறை­வான தொகை­யைப் பயன்­ப­டுத்­து­வ­தாக வீவக தெரி­வித்­தது.

முதிர்ச்சி அடைந்த பேட்­டை­களில் புதிய வீடு வாங்­கி­யோ­ரி­டையே இந்த விகி­தம் 80 விழுக்­காட்­டிற்­கும் மேலாக உள்­ளது.

"அதா­வது, குறைந்த கைக்­காசு அல்­லது கைக்­காசு தேவை­யின்றி, மத்­திய சேம நிதி பங்­க­ளிப்­பைப் பயன்­ப­டுத்தி அவர்­களால் வீட்­டு கட­னைச் செலுத்த முடி­கிறது," என்­றது வீவக.

மறு­விற்­பனை வீடு வாங்­கு­வோர் நெருக்கம் ஊக்குவிக்கும் வீட­மைப்பு மானி­யத்­தைப் பயன்­ப­டுத்­த­லாம். தங்­கள் பெற்­றோர் அல்­லது பிள்­ளை­க­ளு­டன் சேர்ந்து வசிக்க அல்­லது அவர்­கள் வசிக்­கும் வீட்­டி­லி­ருந்து 4 கிலோ­மீட்­டர் தூரத்­திற்­குள் மறு­விற்­பனை வீடு வாங்­கும் குடும்­பங்­க­ளுக்கு $30,000 வரை­யும் ஒற்­றை­யருக்கு $15,000 வரை­யும் மானி­யம் வழங்­கப்­ப­டு­கிறது.

ஈரறை முதல் நாலறை வரையிலான மறு­விற்­பனை வீடு வாங்­கும் குடும்­பங்­கள் மசேநி வீட­மைப்பு மானி­யத்­தி­லி­ருந்­தும் $80,000 வரை பெற­லாம். ஐந்­தறை அல்­லது அதற்­கும் பெரிய வீடு வாங்­கு­வோர் $50,000 வரை மானி­யம் பெற­லாம்.