இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 48 முதல் 72 மணி நேரத்திற்குள் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என காங்கிரஸ் கட்சி நேற்று தெரிவித்தது.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஆட்சியில் இருந்த பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் யார் என்பதை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் இருவரின் ஆதரவாளர்களும் தங்கள் தலைவர்தான் முதல்வராக வேண்டும் என்று கங்கணம் கட்டினர்.
இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர்களான சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார் ஜிதேந்திர சிங் தலைமையில் பெங்களூரில் நேற்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில், கர்நாடக முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் தலைமைக்கு வழங்க கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதையடுத்து, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவகுமார், சித்தராமையா இருவரையும் தனித்தனியே சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிறகு சித்தராமையாவும் சிவகுமாரும் புதுடெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை தனித்தனியாகச் சந்தித்தனர்.
இப்படி கர்நாடக முதல்வர் யார் என்பது குறித்து குழப்பம் நிலவி வந்த நிலையில், இன்னும் 48 மணி நேரத்தில் கர்நாடகாவில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்வராக சித்தராமையாவை காங்கிரஸ் கட்சி மேலிடம் அறிவிக்க உள்ளது என்றும் டி.கே. சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியும் முக்கிய அமைச்சர் பொறுப்புகளும் ஒதுக்கப்படலாம் என்றும் முன்னதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால், முதல்வரைத் தேர்ந்தெடுப்பது குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைமையுடன் தீவிரமாக கலந்தாலோசித்த பிறகு, கர்நாடக முதல்வர் யார் என்பதை திரு மல்லிகார்ஜுன கார்கே விரைவில் அறிவிப்பார் என்று கர்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், "கர்நாடக முதல்வர் யார் என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும். முதல்வர் பதவியேற்பு தொடர்பாக வெளிவரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பாஜகவால் பரப்பப்படும் வதந்திகளையோ ஊகத்தின் அடிப்படையிலான செய்திகளையோ வெளியிட வேண்டாம். கர்நாடகாவில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கும்," என்றார்.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சித்தராமையா, சிவகுமாரின் வீடுகளுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

