பெரும் லாபம்; எஸ்ஐஏ ஊழியர்களுக்கு 8 மாத போனஸ்

2 mins read

பெரு­ம் லாபத்­தைப் பதிவு செய்­துள்ள சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னம் (எஸ்­ஐஏ) அதன் கீழ்நிலை ஊழி­யர்­க­ளுக்கு கிட்­டத்­தட்ட எட்டு மாத போனஸ் வழங்க இருக்­கிறது.

லாபப் பகிர்வு போன­சாக கிட்­டத்­தட்ட 6.65 மாத போனஸ் ஊழியர்களுக்கு வழங்­கப்­படும். அத்­து­டன் அவர்­க­ளது கடு­மை­யான உழைப்­பை­யும் கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது செய்த தியா­கங்­க­ளை­யும் அடை­யா­ளம் காணும் வகை­யி­ல் கூடு­த­லாக ஒன்­றரை மாத போன­சும் வழங்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்டுள்­ளது.

ஊழி­யர் சங்­கங்­க­ளு­டன் இணக்­கம் காணப்­பட்ட நீண்­ட­கால அணு­கு­மு­றைக்கு உட்­பட்டு இந்த வரு­டாந்­திர லாபப் பகிர்வு வழங்­கப்­ப­டு­வ­தாக சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னத்­தின் செய்­தித்­தொ­டர்­பா­ளர் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வனத்­தின் மூன்று ஆண்டு உரு­மாற்­றுத் திட்­டம் அதன் போட்­டித்­தன்­மையை மேம்­ப­டுத்­தி­ய­து­டன் அடித்­த­ளத்­தை­யும் வலுப்­ப­டுத்­தி­இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

கீழ்நிலை ஊழி­யர்­க­ளுக்­குக் கூடு­தல் போனஸ் வழங்­கப்­ப­டு­வ­தற்கு இது­வும் ஒரு கார­ணம். இந்­தக் கூடு­தல் ஒன்­றரை மாத போனஸ் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னத்­தின் மூத்த நிர்­வா­கி­களுக்கு வழங்­கப்­ப­டாது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வனத்­துக்­குத் தற்­போது 24,000 ஊழி­யர்­கள் உள்­ள­னர். இது ஆண்டு அடிப்­ப­டை­யில் 12.3 விழுக்­காடு ஏற்­றம் கண்­டுள்­ளது.

2020ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதத்­தில் கிட்­டத்­தட்ட 4,300 ஊழி­யர்­கள் ஆட்­கு­றைப்பு செய்­யப்­ப­டு­வர் என்று சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னம் அறி­வித்­தது. இருப்­பி­னும், அதில் கிட்­டத்­தட்ட 50 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி நில­வ­ரப்­படி வரு­டாந்­திர வரு­மா­ன­மாக $2.2 பில்­லி­யன் ஈட்­டி­ய­தாக அந்­நி­று­வ­னம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தது. அதற்கு முந்திய ஆண்டில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு $962 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.

ஆண்டு அடிப்படையில் வருமானம் 133.4 விழுக்காடு அதிகரித்துள்ளது.