சீனா அதிபர் ஸி ஜின்பிங், மத்திய ஆசியாவில் உள்ள நட்பு நாடுகளுடன் சேர்ந்து அவற்றின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும் லட்சியத் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
ஜப்பானில் 'ஜி-7' மாநாடு நடைபெறும் வேளையில் மத்திய ஆசிய நாடுகளுடன் உறவைப் பலப்படுத்தும் மாநாட்டை சீனா நடத்தியிருக்கிறது.
கஸக்ஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஆறு நாடுகளின் வளர்ச்சி உத்திகளை ஒருங்கிணைக்கவும் அவற்றை நவீனமயமாக்கும் கூட்டு முயற்சிகளில் ஈடுபடவும் சீனா தயாராக உள்ளது என்று தென்மேற்கு சீனாவில் நடைபெற்ற சீனா-மத்திய சீனா உச்சநிலை மாநாட்டில் பேசிய அதிபர் ஸி தெரிவித்தார்.
சீனாவின் லட்சியத் திட்டம், மத்திய ஆசிய நாடுகளின் உள்கட்டமைப்பு முதல் வர்த்தகம் வரை மேம்படுத்த உதவும்.
"நிலையான, வளமான, இணக்கமான, நன்கு இணைக்கப்பட்ட மத்திய ஆசியாவை உலகம் எதிர்பார்க்கிறது," என்றார் திரு ஸி.
அதே சமயத்தில் வட்டார நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வெளிநாட்டு சக்திகளை ஆறு நாடுகளும் எதிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மத்திய ஆசிய நாடுகளில் சட்ட அமலாக்கம், பாதுகாப்பு, தற்காப்பு ஆகியவற்றில் உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தகப் பட்டுப் பாதை நகரமான ஸியானில் இரண்டு நாள் உச்சநிலை மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டை சீனாவின் வட்டார அரசதந்திர உறவுக்குக் கிடைத்த வெற்றி என்று சீன ஊடகங்கள் வருணிக்கின்றன.
இந்த நிலையில் கஸக்ஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் சீனாவுக்கான ஆதரவை உறுதிப்படுத்தியிருக்கின்றன. இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அவர்கள் சூளுரைத்தனர்.
இவ்வேளையில் அண்டை மத்திய ஆசிய நாடுகளுடன் சீனாவின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் உச்சநிலை மாநாடு, ஹிரோஷிமாவில் இவ்வார இறுதியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் தெரிவிக்கப்படும் சீனாவுக்கு எதிரான கருத்துகளுக்கு பதிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சீனாவின் அரசதந்திர உறவு பற்றிய அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவும் மத்திய ஆசிய மாநாடு உதவும் எனச் சொல்லப்படுகிறது.

