இந்தியாவின் ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை ரூ.2000 நோட்டுகளை மீட்டுக்கொள்ளப்போவதாக அறிவித்த மறுநாளே ராஜஸ்தான் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டுக்கள் சிக்கியுள்ளன.
ஜெய்ப்பூர் அரசு தகவல் தொழில்நுட்ப அலுவலகமான யோஜன பவன் கட்டடத்தின் அடித்தளத்தில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.2.31 கோடி, ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடர்பில் குறைந்தது எழுவரை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். அரசாங்க அலுவலகத்தின் கூடுதல் இயக்குநர் மஹேஷ் குப்தா தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து ரொக்கப் பணத்தையும் தங்கத்தையும் ஜெய்ப்பூர் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலாளர் உஷா சர்மா, ஜெய்ப்பூர் காவல்துறை ஆணையர் ஆனந்த் ஸ்ரீவஸ்தவா, அலுவலகத்தின் அடித்தளத்தில் பணமும் தங்கமும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்தனர்.
அடித்தளத்தில் பூட்டப்பட்டு இருந்த இரண்டு அலமாரிகளின் சாவியைத் தேடி எடுத்து காவல்துறையினர் திறந்து பார்த்தனர். அப்போது அலமாரியில் இருந்த பையைத் திறந்துபார்த்தபோது கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டுகளும் தங்கக் கட்டிகளும் இருந்தன. மொத்தம் 2.31 கோடி ரூபாய் ரொக்கமும் ஒரு கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது.
பணத்தையும் தங்கத்தையும் பதுக்கிவைத்தவர்கள் யார் என்று விசாரணை தொடங்கியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஏழு முதல் எட்டுப் பேர் விசாரணை வலைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

