முன்னேற்பாடுகளைக் கவனிக்க தமிழ்நாட்டு அமைச்சர் டிஆர்பி ராஜா வந்திறங்கினார்
தமிழ்நாட்டுக்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது.
வெளிநாடுகளில் உள்ள தொழிலதிபர்களை நேரில் சந்தித்து மாநாட்டுக்கு அழைக்கவும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு அவர்களைக் கேட்டுக்கொள்ளவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சில நாடுகளுக்குச் செல்கிறார். நாளை தமது பயணத்தைத் தொடங்கும் அவர் முதலில் சிங்கப்பூருக்கு வருகிறார்.
நாளை மறுதினம் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் தமிழ்நாட்டு முதலீட்டு மாநாட்டில் ஸ்டாலினுடன் தமிழ்நாட்டு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும் அந்த மாநிலத்தின் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையும் (சிக்கி) 'கைடன்ஸ் இந்தியா' அமைப்பும் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான எஸ். ஈஸ்வரன் இந்த மாநாட்டில் பங்கேற்பார் என கடந்த வாரம் 'சிக்கி' தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்தியத் தூதர் பி.குமரன், சிக்கி தலைவர் நீல் பரேக் ஆகியோருடன் தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் அரசாங்கங்களின் அதிகாரிகள், சிக்கி நிர்வாகிகள் உட்பட ஏறக்குறைய 350 பேர் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக நகரங்களில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் பற்றி மாநாட்டில் ஆராயப்பட உள்ளது. மாநாட்டு முடிவில் சில உடன்பாடுகள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
திரு ஸ்டாலின் வருகைக்கான ஏற்பாடுகளை இங்குள்ள அமைப்பினருடன் இணைந்து கவனிக்க தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜா நேற்று சிங்கப்பூர் வந்திறங்கியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தலைவர்கள் தமிழ்நாட்டு வர்த்தகத் தலைவர்களுடன் தொடர்புகொள்ள உதவிபுரிவதில் சிக்கி மகிழ்வதாக அதன் தலைவர் நீல் பரேக் கூறினார்.
அதேபோல, தமிழ்நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதன் மூலம் அங்குள்ள மக்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களை ஸ்டாலின் அரசாங்கம் வகுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் லண்டனுக்கும் ஸ்டாலின் செல்லவிருப்பதாகச் செய்தி கள் தெரிவித்தன.

