கொவிட்-19 போன்று புதிதாக உருவெடுக்கும் தொற்றுநோய் அபாயத்தை நாடுகள் உடனுக்குடன் கண்டறிந்து ஒன்றுக்கொன்று உதவும் விதமாக புதிய கட்டமைப்பு ஒன்றை உலக சுகாதார நிறுவனம் தொடங்கி உள்ளது.
ஆரம்பகட்டத்திலேயே புதிய தொற்றுநோயை அறிந்து தகவல்களை நாடுகள் பரிமாறிக்கொள்வதன் மூலம் அந்நோய் பரவுவதைத் தடுக்க இயலும். அந்த நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய கட்டமைப்புக்கு 'ஐபிஎஸ்என்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. நோய் தொற்றியவரிடம் இருந்து மாதிரிகளை எடுப்பதிலும் அவற்றை ஆராய்வதிலும் தற்போதுள்ள நடைமுறைகளை மேம்படுத்தவும் நாடுகளையும் வட்டாரங்களையும் இணைக்கவும் பொதுத்தளம் ஒன்று உருவாக்கப்படும் என்றது நிறுவனம்.
சுகாதார மிரட்டல்களை ஒன்றோடு ஒன்று பகிர்ந்து, ஒன்றுபட்டுப் போராடினால் சுகாதாரப் பாதுகாப்பில் வெற்றி கிட்டும் என்பதை கொவிட்-19 கொள்ளைநோய் நன்கு உணர்த்தி இருப்பதாக நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்பிரியேசஸ் கூறினார். மேலும், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கட்டமைப்பு உலக சுகாதாரப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

