கடந்த பத்தாண்டுகளில் (2012 முதல் 2022 வரை) சிங்கப்பூரில் வசிப்போரது ஆயுட்காலம் மேம்பட்டுள்ளது. இருப்பினும் கொவிட்-19 கொள்ளைநோயால் பாதிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்நிலை இல்லை.
ஆயுட்காலம் 2021ஆம் ஆண்டில் குறைந்ததற்கு பெரும்பாலும் கொவிட்-19 நோயால் உயிரிழந்தோரின் அதிகரிப்பு காரணமாகும்.
2020ஆம் ஆண்டில் குழந்தை பிறக்கும்போது ஆயுட்காலம் 83.7 ஆண்டுகள் என்றிருந்தது. அது 2021ல் 83.2 ஆண்டுகளாகவும் 2022ல் 83.0 ஆண்டுகளாகவும் குறைந்தது.
உயிரிழப்பு விகிதம் 2020, 2021 ஆண்டுகளில் அதிகரித்த நிலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆயுட்காலமும் குறைந்திருந்தது. கொள்ளைநோய்க் காலகட்டத்தில் ஏற்பட்ட அளவுக்கதிமான மரணங்களே இதற்குக் காரணமாகும்.
'அளவுக்கதிமான மரணங்கள்' எனும்போது கொள்ளைநோய் தொடங்கியதிலிருந்து வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் கொள்ளைநோய் இல்லாதபோது உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் ஒப்பிடப்படும்.
இத்தரவுகள் நேற்று புள்ளிவிவரத் துறையின்சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்கான முழுமையான வாழ்க்கை அட்டவணை 2021-2022 என்ற வருடாந்திர அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
2022ல் புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் 83.0 ஆண்டுகள் வரை வாழ்வர் என்றும் 2012ல் பதிவான 82.1 ஆண்டுகளைக் காட்டிலும் இது அதிகம் என்றும் கண்டறியப்பட்டது.
இருப்பினும் 2021ன் ஆயுட்காலத்தைக் காட்டிலும் இது 0.2 ஆண்டுகள் குறைவு. கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு முந்தைய ஆண்டான 2019ன் 83.7 ஆண்டுகளைக் காட்டிலும் 0.7 ஆண்டுகள் குறைவு.
1957ல் முதன்முதலாக ஆயுட்காலம் தொடர்பான தரவுகள் கிடைத்ததை அடுத்து குழந்தைப் பிறப்பில் பதிவான முதல் ஆயுட்காலச் சரிவு இதுவாகும்.
தொடர்ந்து சிங்கப்பூரில் பிறக்கும் குழந்தைகளின் ஆயுட்காலம் கடந்த பத்தாண்டில் முன்னேற்றம் கண்டு வருகிறது.
ஆண்களுக்கான ஆயுட்காலம் 80.7 ஆண்டுகள் என்றும் பெண்களுக்கான ஆயுட்காலம் 85.2 ஆண்டுகள் என்றும் 2022ல் கண்டறியப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன் பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும் இது 0.9 ஆண்டுகள் அதிகம்.
இந்நிலையில், 2022ல் பிறந்த ஆண்களில் 89.4 விழுக்காட்டினர் 65 வயதில் உயிருடன் இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டது. 2012ல் இது 88.2 விழுக்காடாக இருந்தது. பெண்களில் 94 விழுக்காட்டினர் 65 வயதில் உயிரோடு இருப்பர் என்றும் 2012ல் இது 93 விழுக்காடாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.