ரிடவ்ட் ரோடு சொத்துகள் பற்றி மறுஆய்வு: பிரதமர் லீ

ரிடவ்ட் ரோடு சொத்துகள் பற்றி மறுஆய்வு: பிரதமர் லீ

2 mins read

மறுஆய்வு செய்யும்படி அமைச்சர்கள் சண்முகம், விவியன் கேட்டுக்கொண்டனர்

மூத்த அமைச்­ச­ரும் தேசிய பாது­காப்பு ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான டியோ சீ ஹியன், ரிடவ்ட் ரோடு சொத்­து­கள் குறித்த மறு­ஆய்வு ஒன்றை நடத்­த­வி­ருக்­கி­றார்.

பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில், நம்பகத்தன்மையின் மிக உயர்ந்த தரநிலைகளை அரசாங்கம் கட்­டிக்­காப்­பதை உறுதி­செய்ய இந்த மறு­ஆய்வு இடம்பெறவேண்­டும் என்றார்.

தாங்­கள் மேற்­பார்­வை­யி­டும் அமைச்­சு­க­ளுக்­கும் அமைப்­பு­களுக்­கும் சுயேச்சை­யாக மறு­ஆய்வு நடத்­தக் கோரி சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­க­மும் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ண­னும் தம்­மி­டம் பேசி­ய­தாக திரு லீ குறிப்­பிட்­டார்.

"உண்மை விவ­ரங்­களை எடுத்­து­ரைக்­கும் அறிக்­கை­களைச் சமர்ப்­பிக்­கு­மாறு சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­க­ளி­டம் நான் கேட்­டி­ருக்­கி­றேன்.

"இந்த விவ­கா­ரத்தை மறு­ஆய்வு செய்து, முறை­யான நடை­மு­றை­கள் பின்­பற்­றப்­பட்­ட­னவா என்­பதை உறு­தி­செய்து, தவறு ஏதே­னும் புரி­யப்­பட்­டு உள்­ளதா என்­ப­தைக் கண்­ட­றி­யு­மாறு மூத்த அமைச்­சர் டியோ­வி­டம் நான் கேட்­டுக்­கொண்­டு உள்­ளேன்.

"மறு­ஆய்வை விரைந்து ஆற்­ற­லு­டன் நடத்தி, நாடா­ளு­மன்­றம் கூடு­வ­தற்கு ஏது­வாக முடி­வு­களை வெளி­யி­டு­மாறும் மூத்த அமைச்­சர் டியோ­வி­டம் கேட்­டுக்­கொண்­டுள்­ளேன்," என்று திரு லீ கூறி­னார்.

திரு சண்­மு­க­மும் டாக்­டர் பால­கி­ருஷ்­ண­னும் முறையே எண் 26, எண் 31 ரிடவ்ட் ரோட்­டில் வாட­கை­தா­ரர்­க­ளாக இடம்­பெற்ற நில­வ­ரம் குறித்து உரை­யா­டல்­கள் எழுந்­துள்­ளன.

அவ்­விரு கால­னித்­துவ பங்­களா வீடு­கள் குறித்து சீர்­திருத்த கட்­சித் தலை­மைச் செயலாளர் கென்னத் ஜெய­ரத்­தினம் சமூக ஊட­கப் பதி­வு­களை வெளி­யிட்­ட­தைத் தொடர்ந்து, இது­கு­றித்து உரை­யா­டல்­கள் உரு­வெ­டுக்­கத் தொடங்­கின.

மே 6ஆம் தேதி திரு ஜெயரத்தி­னம் வெளி­யிட்ட பதிவு ஒன்­றில், "அத்­த­கைய விலை­யு­யர்ந்த சொத்­துக்கு எப்படி அமைச்­சர்­க­ளால் சந்தை வாட­கை­யைச் செலுத்த முடி­கிறது என்­ப­தைப் பார்ப்­பது சிர­ம­மாக உள்­ளது," என்று கூறி­ இருந்­தார்.

சிங்­கப்­பூர் நில ஆணை­யம் மே 12ஆம் தேதி வெளி­யிட்ட அறிக்­கை­யில், அவ்­விரு சொத்­து­களும் திரு சண்­மு­கத்­துக்­கும் டாக்­டர் பால­கி­ருஷ்­ண­னுக்­கும் வாட­கைக்கு விடப்­பட்­டுள்­ளதை உறு­திப்­ப­டுத்­தி­யது.

அவ்­விரு சொத்­து­களும் பல ஆண்­டு­க­ளாக காலி­யாக இருந்­தன என்­றும் ஆணை­யத்­தின் சம்­பந்­தப்­பட்ட நடை­மு­றை­களுக்கு முழு­மை­யாக உட்­பட்டே அவை வாட­கைக்கு விடப்­பட்­டன என்­றும் ஆணை­யம் கூறி­ இ­ருந்­தது.

ரிடவ்ட் ரோடு சொத்­து­கள் அமைச்­சர்­க­ளுக்கு எப்­படி வாட­கைக்கு விடப்­பட்­டன என்­பது குறித்த விவ­ரங்­க­ளை­யும் ஆணை­யம் அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

தனக்கு எத்­தனை ஏலக் கோரிக்­கை­கள் கிடைக்­கப்­பெற்­றன என்­பது பற்­றியோ சொத்து­கள் எவ்­வ­ளவு வாட­கைக்கு விடப்­பட்­டன என்­பது பற்­றியோ ஆணை­யம் கூற­வில்லை.

ஜூலை­யில் நாடா­ளு­மன்­றம் அடுத்­து கூடும்­போது இந்த விவ­கா­ரம் குறித்து மேல்­வி­வ­ரம் வழங்­கப்­படும் என்று ஆணை­யம் குறிப்­பிட்­டது.

நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தின்­போது இது குறித்த கேள்­வி­களை தாங்­கள் கேட்­க­வி­ருப்­பதாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கூறி­னர்.