ரிடவ்ட் ரோடு சொத்து வாடகைக்கு விடப்பட்ட விவகாரம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், தவறு ஏதேனும் நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய சுயேச்சை மறுஆய்வு நடத்த தாம் பரிந்துரைத்ததாகக் கூறினார்.
"யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் சரி, செயல்பாடு நம்பகமான முறையில் இயங்குகிறதா என்பதை உறுதிசெய்ய இதுபோன்ற அணுகுமுறை நமக்குத் தேவை. அமைச்சர்களின் நம்பகத்தன்மை குறித்த ஐயங்களை மோசமடைய விடவோ அவற்றுக்குப் பதிலளிக்காமல் விட்டுவிடவோ கூடாது," என்று அவர் சொன்னார்.
"என்னிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. உண்மை விவரங்களை வெளியிட்டு நாடாளுமன்றம், மக்களிடம் அவற்றை முன்வைக்க வேண்டும். நம்பிக்கையைத் தக்கவைக்க அதுவே ஒரே வழி. நாடாளுமன்றம் ஜூலையில் கூடும்போது, இதுகுறித்த கேள்விகள் கையாளப்படும்," என்றும் திரு சண்முகம் விவரித்தார்.
இந்த விவகாரம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இருப்பதாகச் சொன்ன அவர், என்றாலும், "நாங்கள் எப்படி நடந்துகொண்டோம் என்பது குறித்து நாங்கள் தன்னம்பிக்கையுடன் உள்ளோம். எனவேதான், சுயேட்சை மறுஆய்வு நடத்துமாறு பிரதமரிடம் நாங்கள் கோரினோம்," என்றார்.
தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டதற்கு, "மூத்த அமைச்சர் டியோவின் மறுஆய்வு முடியும்வரை நான் பெரிதாக கருத்துரைக்க விரும்பவில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் பேசும்போது, குற்றச்சாட்டுகள் மோசமானவை என்று கூறுவேன். மறுஆய்வு முடியட்டும். உண்மை வெளிவரட்டும். அதன்பின் நான் பதில் கூறுவேன். தவறு நடந்திருப்பது மறுஆய்வில் தெரியவந்தால், என்ன நடக்கும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியும்," என்றார் திரு சண்முகம். இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து மறுஆய்வு நடத்த பிரதமர் லீ ஏற்றுக்கொண்டதற்கும் நாடாளுமன்றத்தில் முழு விவாதம் இடம்பெறுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட உண்மைகள், முடிவுகளை வெளியிடுவதற்கும் தாம் மிகுந்த மகிழ்ச்சி கொள்வதாக டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.