அனைத்துலக அமைப்புகள் உடனான ஒத்துழைப்பின் மூலம், மலேசியாவிலிருந்து தப்பியோடிய தொழிலதிபர் ஜோ லோவை விரைந்து நாடுகடத்த மலேசிய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக சட்ட, கழக சீர்திருத்தங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் பிரதமர் அலுவலக அமைச்சர் அஸலினா ஒத்மான் தெரிவித்து உள்ளார்.
அரசாங்க முயற்சிகளில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
"ஜோ லோ தொடர்பிலான அனைத்துத் தகவல்களையும் பெற வெளிநாட்டு அமலாக்க அமைப்புகளுடன் ஊழல் தடுப்பு ஆணையம் ஒத்துழைத்து வருகிறது.
"ஜோ லோவை மலேசியாவுக்குக் கொண்டு வருவதன் தொடர்பிலான நடைமுறையை வேகப்படுத்த அரசதந்திர ரீதியிலாக வெவ்வேறு முயற்சிகளும் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன," என்று நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துபூர்வ பதிலில் திருவாட்டி அஸலினா குறிப்பிட்டார்.
1எம்டிபி வழக்கில் ஜோ லோ சம்பந்தப்பட்டிருப்பது குறித்து 2018லிருந்து அவருக்கு எதிராக அனைத்துலக காவல்துறை சிவப்பு எச்சரிக்கையை ஆணையம் விடுத்திருந்ததாக திருவாட்டி அஸலினா சொன்னார்.

