எவரெஸ்ட் மலை சிகரத்தைத் தொட்டு பின்னர் காணாமல்போன சிங்கப்பூரர் ஸ்ரீநிவாஸ் சைனிஸ் தத்தாத்ரேயா, 39, என்பவரைத் தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
மீட்புக் குழுவைச் சந்திக்க திரு ஸ்ரீநிவாசின் குடும்பத்தினர் நேப்பாளம் சென்றுள்ளதாக நேப்பாளத்தைச் சேர்ந்த பயண ஏற்பாட்டாளர் பிரகாஷ் சந்திரா தேவ்கோடா தெரிவித்தார்.
அவரது நிறுவனமும் 'செவன் சமிட் டிரேக்ஸ்' எனும் பயண நிறுவனமும் இணைந்து திரு ஸ்ரீநிவாசின் மலையேறும் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிலையில், ஷெர்பா வழிகாட்டிகள் மூவர் அடங்கிய குழுக்கள் திரு ஸ்ரீநிவாசை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் திரு தேவ்கோடா நேற்று முன்தினம் கூறினார்.
மே 19ஆம் தேதி திரு ஸ்ரீநிவாஸ் எவரெஸ்ட் மலை உச்சியைத் தொடுவதைக் காட்டும் புகைப்படங்களை திரு தேவ்கோடா பகிர்ந்தார்.
'ஜேஎல்எல் டெக்னாலஜிஸ்' சொத்து தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியியல் துறை மூத்த மேலாளரான திரு ஸ்ரீநிவாஸ், அப்போது ஆரஞ்சு நிற குளிர்கால ஆடை, கண்ணாடி, உயிர்வாயுக் கவசத்தை அணிந்திருந்தார்.
மற்றொரு படத்தில், திரு ஸ்ரீநிவாஸ் படுத்திருக்க, மூவர் அவரைச் சூழ்ந்திருந்தனர். திறன்பேசியைக் கொண்டு ஒருவர் திரு ஸ்ரீநிவாசை படமெடுத்தார்.
தாம் எவரெஸ்ட் உச்சியை அடைந்துவிட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை தம் மனைவி சுஷ்மா சோமாவுக்கு திரு ஸ்ரீநிவாஸ் செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் குறுந்தகவல் அனுப்பி இருந்தார்.
எனினும், அதிக உயரத்தில் ஏற்படக்கூடிய 'ஹேஸ்' எனும் கடும் நோய் பாதிப்பால் தாம் அவதியுற்றதாக மனைவியிடம் திரு ஸ்ரீநிவாஸ் அப்போது கூறி இருந்தார்.
திரு ஸ்ரீநிவாசுடன் இருந்த இரு வழிகாட்டிகளும் குழுவில் இருந்த மற்றொருவரும் மலையிலிருந்து இறங்கிவிட்டதையும் ஆனால், தம் கணவர் இறங்கவில்லை என்பதையும் மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு திருவாட்டி சுஷ்மா அறிந்தார்.
நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில், "உங்களது செய்திகளுக்காக அனைவருக்கும் நன்றி. உங்களது அன்புக்கும் அக்கறைக்கும் நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்," என்று குறிப்பிட்டார்.