இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கவுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் அவ்விழாவைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன.
இதன் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
அவ்வறிக்கையில், "அதிபர் திரௌபதி முர்முவை ஒதுக்கிவிட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பிரதமர் மோடி தானே திறந்துவைக்க முடிவுசெய்திருப்பது பெருத்த அவமானம் மட்டுமன்று, மக்களாட்சியின் மீதான நேரடித் தாக்குதலும்கூட.
"மக்களாட்சியின் ஆன்மா பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், புதிய கட்டடத்திற்கு எந்த மதிப்பும் இல்லை. அதனால், புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழாவைப் புறக்கணிப்பது என்று கூட்டாக முடிவு எடுத்துள்ளோம்.
"சர்வாதிகாரத்துடன் நடந்துகொள்ளும் பிரதமருக்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிராகத் தொடர்ந்து போராடுவோம்.
"எங்களது இக்கருத்தை மக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்வோம்," என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 19 கட்சிகள் அக்கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழா அழைப்பிதழ் கடந்த செவ்வாய்க்கிழமையன்று வாட்ஸ்அப் வழியாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, புதிய நாடாளுமன்றக் கட்டடம் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அத்துடன், திறப்புவிழா அழைப்பிதழ் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுவிட்டது என்றும் அந்நிகழ்வில் அவர்கள் கலந்துகொள்வதும் கலந்துகொள்ளாததும் அவர்களது உரிமை என்றும் அவர் கூறினார்.

