இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க 'தமிழ்நாட்டுச் செங்கோல்' வைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
"இந்திய வரலாற்றில் இச்செங்கோலுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இந்தியா சுதந்திரமடைந்தபோது, பிரிட்டிஷாரிடமிருந்து அதிகாரம் இந்திய மக்களிடம் கைமாறுவதைக் குறிப்பிடும் விதமாக, திருவாவடுதுறை ஆதீனம் இந்தச் செங்கோலை இந்தியாவின் முதல் பிரதமர் நேருவிடம் வழங்கினார்," என்று திரு ஷா சொன்னார்.
சோழர் காலத்தில் பயன்படுத்தியதைப் போன்ற இந்தச் செங்கோல் ஆறடி நீளமுடையது; தங்க முலாம் பூசப்பட்டது. திறப்புவிழா நாளன்று பிரதமர் மோடி இந்தச் செங்கோலைப் பெற்றுக்கொள்வார் என்றும் அது நாடாளுமன்ற நாயகரின் இருக்கைக்கு அருகே வைக்கப்படும் என்றும் திரு ஷா கூறினார்.

