வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்புத் தடுப்புகள்மீது சரக்கு வாகனத்தை மோதிய சம்பவம் தொடர்பில் 19 வயது இந்திய வம்சாவளி இளையர் ஒருவர் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டார்.
கடந்த திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் நிகழ்ந்தது.
சாய் வர்ஷித் கந்துலா என்ற அந்த இளையரை விசாரித்தபோது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனைத் தான் கொல்லப்போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டது. அதற்காக அவர் ஆறு மாதங்களாகத் திட்டமிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து, அதிகாரத்தைக் கைப்பற்றுவதே தனது இலக்கு என்று விசாரணையின்போது கந்துலா கூறினார். அவர் ஓட்டி வந்த சரக்கு வாகனத்தில் ஆயுதம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் வாகனம் மோதியதால் எவரும் காயமடையவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாகனத்தைப் பொறுப்பற்ற முறையில் இயக்கியது, அதிபரை, துணை அதிபரை அல்லது குடும்ப உறுப்பினரைக் கொல்ல அல்லது கடத்த அல்லது தாக்கப்போவதாக அச்சுறுத்தியது, அரசாங்கச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது, அத்துமீறி நுழைந்தது போன்ற குற்றச்சாட்டுகள் கந்துலாமீது சுமத்தப்பட்டுள்ளன.
முன்னாள் ஜெர்மானிய சர்வாதிகாரியான அடோல்ஃப் ஹிட்லரின் `நாஸி' கொள்கை தன்னைப் பெரிதும் கவர்ந்துள்ளதாகவும் கந்துலா கூறினார்.
பாதுகாப்புத் தடுப்புகள்மீது மோதிய வேகத்தில் அவர் ஓட்டிய வாகனத்திலிருந்து புகை கிளம்பியது. அதன்பின் வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், அதன் பின்னால் செருகியிருந்த நாஸி `ஸ்வஸ்திகா' கொடியைப் பிடுங்கியதாகவும் கூறப்பட்டது.

