சிங்கப்பூரின் பிரதமராக எப்போது பதவி ஏற்பது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து கூடிய விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
பிரதமராகப் பதவி ஏற்பது அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பு அல்லது பிறகு நடைபெறலாம் என்று நிதி அமைச்சருமான திரு வோங் கூறினார். அடுத்த பொதுத் தேர்தல் 2025ஆம் ஆண்டுக்குள் நடத்தப்பட வேண்டும்.
அடுத்த பிரதமராகப் பதவி ஏற்பது குறித்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவர் வெளிப்படையாகப் பேசினார்.
ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெறும் 'ஃபியூச்சர் ஆஃப் ஏஷியா' கருத்தரங்கில் திரு வோங் நேற்று கலந்துகொண்டார். பிரதமராகப் பதவி ஏற்பது குறித்து கலந்துரையாடலின் நெறியாளரான நிக்கே செய்தி நிறுவனத்தின் அனைத்துலகச் செய்திப் பிரிவின் தலைவர் ஷிஜிசாபுரோ ஒக்குமுரா கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் திரு வோங்கின் விளக்கம் அமைந்தது. 28வது 'ஃபியூச்சர் ஆஃப் ஏஷியா' கருத்தரங்கில் வர்த்தகத் தலைவர்கள், கல்விமான்கள், ஊடகத் துறையினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமது பதவி ஏற்பு எப்போது நடைபெறும் என்று ஊடகத் துறையினர் அடிக்கடி கேள்வி எழுப்புவதை திரு வோங் சுட்டினார்.
ஆனால் தற்போது சிங்கப்பூரின் பொருளியல் தொடர்பான விவகாரங்கள், சமூகக் கொள்கைகளை மறுஆய்வு செய்வது ஆகியவற்றுக்கு முன்னுரிமை தருவதாக அவர் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதை அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இம்மாதம் மட்டும் ஜப்பானுக்கு இருமுறை பயணம் மேற்கொண்டிருப்பதை அவர் சுட்டினார்.
இதற்கு முன்பு நிகாட்டாவில் ஏழு நிதி அமைச்சர்களுக்கான கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.
ஒருங்கிணைக்கப்பட்ட உல்லாசத்தளங்கள், அமெரிக்காவின் ஜனநாயக உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள சிங்கப்பூருக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குத் துணைப் பிரதமர் வோங் பதிலளித்தார். அமெரிக்காவின் ஜனநாயக உச்சநிலை மாநாடு இரண்டு முறை நடத்தப்பட்டுள்ளது. அதில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்டன.
ஒருங்கிணைக்கப்பட்ட உல்லாசத்தளங்களைப் பொறுத்தவரை, பல ஆண்டுகள் இழுபறிக்குப் பிறகு ஒசாக்காவில் புதிய தளம் ஒன்றைக் கட்ட ஜப்பான் கடந்த மாதம் முதல்முறையாகப் பச்சைக்கொடி காட்டியது.
சிங்கப்பூரில் மரினா பே சேண்ட்ஸ், ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா ஆகிய இரண்டு ஒருங்கிணைக்கப்பட்ட உல்லாசத் தளங்களும் உலகத் தரம்வாய்ந்த பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட நாடு எனத் தடம் பதிக்க சிங்கப்பூருக்குப் பெரிதும் உதவியிருப்பதாக திரு வோங் கூறினார்.
அவற்றின் மூலம் சிங்கப்பூரில் புதிய வேலைகள் உருவாகிஇருப்பதாகவும் சுற்றுப்பயணத்துறை மேம்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சூதாட்டத்துக்கு அடிமையாகும் பிரச்சினை கவலைக்குரியதாக இருந்தாலும் தேவையான பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்தியிருப்பதால் இப்பிரச்சினையை சமாளிக்க முடிவதாக அவர் கலந்துரையாடலின்போது கூறினார்.
அமெரிக்காவின் ஜனநாயக உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள சிங்கப்பூருக்கு அழைப்பு விடுக்கப்படாதது பற்றியும் அவர் பேசினார்.
"எங்கள் அடையாளம் பற்றி எங்ளுக்கு நன்றாகவே தெரியும். அதில் எங்களுக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை. எங்கள் அடையாளத்தைப் பற்றி எங்களிடமே எடுத்துச் சொல்ல வெளி ஆட்கள் அல்லது மற்ற நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகள் மூலம் கிடைக்கும் அங்கீகாரம் தேவையில்லை. தாராளமயமான ஜனநாயக அணுகுமுறையைப் பின்பற்றும் மேற்கத்திய நாடுகளின் பண்புகள் சிங்கப்பூரிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்டால் அதற்குப் பதில் இல்லை என்று சொல்வேன்.
"மற்ற நாடுகளின் அணுகுமுறைகளை சிங்கப்பூர் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதில்லை. எங்கள் தேவைக்கு ஏற்ப நாங்கள் மாறுவோம், தேவையானவற்றைப் பற்றி கற்றுக்கொள்வோம். சிங்கப்பூரின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்புடைய அணுகுமுறையை உருவாக்கி நடைமுறைப்படுத்துவோம். இந்த அணுகுமுறை எங்களுக்கு இதுவரை நல்ல பலனைத் தந்துள்ளது," என்று திரு வோங் கூறினார்.
அரசாங்கம் மீதும் அரசாங்க அமைப்புகள் மீதும் சிங்கப்பூரர்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதை அரசாங்கத்தால் நடத்தப்படாத பிற அமைப்புகளின் ஆய்வுகள் காட்டுவதை அவர் சுட்டினார். சிங்கப்பூரின் அரசியல் முறை நன்கு செயல்பட்டு வருவதாக கூறிய திரு வோங், அது தொடர்ந்து மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
"நாட்டின் அரசியல் முறை நிச்சயம் காலத்துக்கு ஏற்ப மாறும். ஆனால் அந்த மாற்றத்தை சிங்கப்பூரர்கள் நிர்ணயிப்பர், வெளிநாடுகள் அல்ல," என்றார் திரு வோங்.
சிங்கப்பூரின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி என்றென்றும் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் என்று நினைத்தால் அது வெறும் பிரமையாகிவிடும் என்றார் அவர். மக்கள் செயல் கட்சி ஒழுங்காக செயல்படாமல் மக்கள் அதிருப்தி அடைந்தால் சிங்கப்பூரின் அரசாங்கமாக அவர்கள் எதிர்க்கட்சியைத் தேர்ந்தெடுக்கக்கூடும் என்று திரு வோங் கூறினார். வேலைகள், வாழ்க்கைச் செலவினம் போன்ற சிங்கப்பூரர்கள் எதிர்நோக்கும் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளில் மக்கள் செயல் கட்சி கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.

