மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 9 வயது சிறுவன் மரணத்தின் பிடியில் சிக்காமல் உயிர் பிழைத்த விதம் அங்குள்ளவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
அச்சிறுவன் கடலில் நீந்தி வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது திடீரென்று முதலை ஒன்று அவனைத் தாக்கியது.
அப்போது அச்சிறுவனுடன் அவனது நண்பர்களும் இருந்தனர். இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் 1 மணி அளவில் சாபாவில் உள்ள சண்டகான் பகுதியைச் சேர்ந்த பத்து பூத்தே கிராமத்தில் நடைபெற்றது. கடலுக்கு நடுவில் அந்தக் கிராமம் இருப்பது குறிப்பிடத்தக்கது. முதலை கடித்ததில் சிறுவனின் இடது கை, தோள்பட்டை, தலையில் காயங்கள் ஏற்பட்டன. ஆனால் சிறுவன் தமது உயிருக்காகப் போராடினான். கடுமையான வலி ஏற்பட்டபோதிலும் முதலையை அவன் அடித்து விரட்டினான். அச்சிறுவன் முதலையுடன் போராடிக்கொண்டிருந்தபோது அவனது தந்தை அவ்விடத்துக்கு விரைந்தார். சிறுவன் தொடர்ந்து அடித்ததில் விலகிச் சென்றது முதலை. சிறுவனின் தந்தை அவனை உடனடியாக தனியார் மருந்தகத்துக்குக் கொண்டு சென்றார். அங்கு அவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
"சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளது. அவனது கையில் எட்டு தையல்கள் போடப்பட்டன," என்று சாபா வனவிலங்குத் துறை தெரிவித்தது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாதிருக்க தாக்குதல் நடந்த இடத்தில் அது கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.