எவரெஸ்ட் மலையின் சிகரத்தை அடைந்து பிறகு காணாமல் போன சிங்கப்பூரரான திரு ஸ்ரீநிவாஸ் சைனிஸ் தத்தரயாவைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவரது மனைவி நேற்று இன்ஸ்டகிராமில் பதிவிட்டார்.
தமது கணவரைக் கண்டுபிடிக்க மீட்புக் குழுவினர் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததாக 36 வயது திருவாட்டி சுஷ்மா சோமா கூறினார். அத்துடன் தமது கணவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது பதிவு அமைந்தது.
"என் கணவருக்கு 39 வயது. அவர் பயமின்றி, மிகச் சிறப்பாக வாழ்ந்தார். வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தார். கடலின் ஆழத்தைக் கண்டறிந்தவர். மலையின் உச்சிக்கும் சென்றவர்.
"அவருக்கு மலைகள் என்றால் கொள்ளைப் பிரியம். இறுதியில் மலைகளுடன் அவர் கலந்துவிட்டார்.
"அவர் கண்ட கனவுகள் அசாதாரணமானவை. தமது கனவு, நடவடிக்கைகளால் என்னவெல்லாம் நடக்கலாம் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அனைத்திற்கும் தயாராக இருந்தார்," என்று திருவாட்டி சுஷ்மா பதிவிட்டார்.
இம்மாதம் 19ஆம் தேதியன்று எவரெஸ்ட் மலையின் சிகரத்தை திரு ஸ்ரீநிவாஸ் அடைந்தார். ஆனால் தமது உடல்நலம் குன்றியதாகவும் மலையிலிருந்து கீழே இறங்கும் சாத்தியம் மிகவும் குறைவு என்றும் அவர் தமது மனைவியிடம் தெரிவித்திருந்தார்.
தமது கணவர் மலை ஏறியபோது அவருக்கு வழிகாட்டியாக இருந்த திரு டென்டிக்கு திருவாட்டி சுஷ்மா நன்றி தெரிவித்துக்கொண்டார்.
தமது கணவரை அவர் காப்பாற்ற முயன்றதாகவும் அதன் விளைவாக அவர் காயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் திருவாட்டி சுஷ்மா தமது பதவில் பகிர்ந்துகொண்டார்.

