உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிகளில் கூடுதல் தானியங்கி குடிநுழைவுத் தடங்கள் பயன்படுத்தப்படுவதால் பேருந்துப் பயணிகள் சோதனைச்சாவடியைக் கடக்கும் நேரம் குறைந்துள்ளது.
இந்த மாற்றத்தால் மணிக்கு கூடுதலாக 1,000 பேருந்துப் பயணிகள் சோதனைச்சாவடிகளைக் கடக்கின்றனர்.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு 2019ல் இருந்த நிலையைவிட இது 20 விழுக்காடு அதிகம் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.
கூடுதல் தானியங்கி குடிநுழைவுத் தடங்கள் பயன்படுத்தப்படுவதால் கூடுதல் ஆதரவு தேவைப்படும் மற்ற இடங்களில் குடிநுழைவு அதிகாரிகளைப் பணியமர்த்த முடிவதாக ஆணையம் கூறியது.
தற்போது உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் குடிநுழைவு அதிகாரிகளைக் கொண்ட ஏழு தடங்களும் 68 தானியங்கித் தடங்களும் உள்ளன.
இந்த 68 தானியங்கித் தடங்களில் 28 தடங்கள் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படலாம்.
நாள்தோறும் ஏறத்தாழ 242,000 பயணிகள் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியைக் கடக்கின்றனர்.
அவர்களில் 100,000 பேர் பேருந்துப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு கூடுதல் தானியங்கி குடிநுழைவுத் தடங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று ஆணையத்தின் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்குத் தலைமைதாங்கும் மூத்த உதவி ஆணையர் கொலின் டான் தெரிவித்தார்.
இதற்கிடையே, பேருந்துப் பயணிகள் சோதனைச்சாவடியை விரைவாகக் கடக்க வேறு சில நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பேருந்துகளுக்கான குடிநுழைவுத் தடங்களுக்குச் செல்லாமல் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வளாகத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பிறகு ஏற்றிக்கொள்ள 'லூப்' முறைப்படி காஸ்வே லிங்க் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்
பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து புறப்
பட்டுச் செல்லும் பொதுப் பேருந்துகளுக்காகவே குடிநுழைவுத் தடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தானியங்கி குடிநுழைவுத் தடங்கள் முறை கடந்த ஜனவரி மாதம் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளுக்கு
விரிவுபடுத்தப்பட்டது.

