குறையவிருக்கும் நிலக் குத்தகைத் தொகை

குறையவிருக்கும் நிலக் குத்தகைத் தொகை

3 mins read

வழிபாட்டுத் தலங்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் திருத்தம்

சிங்­கப்­பூ­ரில் உள்ள சமய அமைப்­பு­கள் வழி­பாட்­டுத் தலங்­க­ளுக்­கா­கச் செலுத்­தும் புதிய நிலக் குத்­த­கைத் தொகை­யும் குத்­த­கை­யைப் புதுப்­பிப்­ப­தற்­குச் செலுத்­தும் தொகை­யும் இனி குறை­ய­வி­ருக்­கிறது.

அர­சாங்­கம் வழி­பாட்டு நிலங்­க­ளுக்கு நிலம் ஒதுக்­கீடு செய்­வது தொடர்­பான கொள்­கை­களில் திருத்­தம் செய்­தி­ருப்­பது அதற்­குக் கார­ணம்.

இந்த ஆண்­டின் மூன்­றாம் காலாண்­டில் இருந்து வழி­பாட்­டுத் தலங்­க­ளுக்­கான நில ஒதுக்­கீடு குலுக்­கல் முறை­யில் தெரிவு செய்­யப்­படும்.

குத்­தகை வழங்­கப்­படும் அமைப்­பு­கள் நிலப்­ப­கு­தி­யின் சந்தை விலை அடிப்­ப­டை­யில் ஏற்­கெ­னவே நிர்­ண­யிக்­கப்­பட்ட தொகையை மட்­டும் செலுத்­தும்.

தேசிய வளர்ச்சி அமைச்சு நேற்று அந்­தத் தக­வல்­களை வெளி­யிட்­டது.

தற்­போது ஏலக் குத்­தகை முறை நடை­மு­றை­யில் உள்­ளது. 1990களின் தொடக்­கம் முதல் அந்த அடிப்­ப­டை­யில்­தான் பெரும்­பா­லான வழி­பாட்­டுத் தலங்­க­ளுக்­கான நிலப் பகுதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­கிறது.

அண்­மைய ஆண்­டு­களில் போட்­டித்­தன்மை அதி­க­ரித்­த­தால் ஏலக் குத்­த­கைத் தொகை மிக­வும் அதி­க­மா­கி­விட்­டது என்று சமய அமைப்­பு­கள் அர­சாங்­கத்­தி­டம் கவலை தெரி­வித்திருந்­தன.

அர­சாங்­கம் அதன் தொடர்­பில் மறு­ஆய்வு செய்து நில ஒதுக்­கீட்­டுக் கொள்­கை­யில் திருத்­தத்தை அறி­வித்­துள்­ளது.

இனி குலுக்­கல்­மு­றை­யில் குத்­தகை வழங்­கப்­ப­டும்­போது சமய அமைப்­பு­கள் ஏல நடை­முறை­யை­வி­டக் குறை­வான தொகை­யையே செலுத்­தும் என்று கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் கூறி­னார். நீ ஆன் சிட்டி­யில் நடை­பெற்ற விசாக தினக் கொண்­டாட்ட நிகழ்ச்­சி­யில் அவர் உரை­யாற்­றி­னார்.

குத்­த­கை­யைப் புதுப்­பிப்­ப­தற்­கான தொகை­யும் குறை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நிலப் பகுதி முயிஸ் எனப்­படும் சிங்­கப்­பூர் இஸ்­லா­மி­யச் சமய மன்­றத்­திற்கு நேர­டி­யாக ஒதுக்­கப்­படும். தலைமை மதிப்­பீட்­டா­ளர் நிர்­ண­யிக்­கும் சந்தை விலை­யைச் செலுத்தி அர­சாங்­கத்­தி­டம் இருந்து பெற்­றுக்­கொண்டு, பின்­னர் மன்­றம் அவற்­றைப் பள்­ளி­வா­சல்­களுக்கு ஒதுக்­கீடு செய்­வது வழக்­கம்.

ஏல நடை­முறை இல்­லா­த­தால் பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான குத்­த­கைத் தொகை பொது­வா­கக் குறை­வாக இருப்­ப­தாக சென்ற ஆண்டு அக்­டோ­ப­ரில் சட்ட அமைச்­சர் கா. சண்­மு­கம் தெரி­வித்­தார்.

2011 முதல் 2020 வரை­யில் ஐந்து சீனக் கோயில்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட நிலப் பகு­தி­யின் மதிப்பு, ஒரு சதுர மீட்­ட­ருக்கு $1,752.

அதே கால­கட்­டத்­தில் நான்கு தேவா­ல­யங்­க­ளுக்கு ஒரு சதுர மீட்­ட­ருக்கு $2,963 எனும் விலை­யில் நிலம் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

புதிய நடை­மு­றை­யின்­கீழ் சமய அமைப்­பு­கள் அனைத்­தும் பயன்­பெ­று­வதை உறு­தி­செய்­யும் வகை­யில் கடந்த ஐந்து ஆண்டு­களில் புதிய நிலப்­ப­கு­தி­யைப் பெற்­றுக்­கொண்ட சமய அமைப்­பு­கள் குலுக்­க­லில் பங்­கு­பெற அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்டா என்று தேசிய வளர்ச்சி அமைச்சு கூறி­யது.

இவ்­வே­ளை­யில், புதிய நடை­மு­றையை இங்­குள்ள சம­யக் குழுக்­கள் வர­வேற்­றுள்­ளன.

ஏற்­கெ­னவே நிர்­ண­யிக்­கப்­பட்ட தொகைக்கு குலுக்­கல் முறை­யில் தேர்வு செய்­யப்­ப­டு­வ­தால் மிஞ்­சும் தொகையை சமூ­கத் தேவை­க­ளுக்­குக் கூடு­த­லா­கச் செல­விட முடி­யும் என்­பதை அவை சுட்­டின.

குறிப்­பாக குறைந்த நிதி வளம் கொண்ட சமய அமைப்­பு­கள் இத­னால் நன்­மை­ய­டை­யும் எனக் கூறப்­பட்­டது.

கோயில் திட்­டங்­கள், கல்வி, அற­நிதி போன்­ற­வற்­றுக்­குக் கூடு­த­லா­கச் செல­விட முடி­யும் என்று சிங்­கப்­பூர் பௌத்த கூட்­ட­மைப்பு, சிங்­கப்­பூர் தேவா­ல­யங்­க­ளுக்­கான தேசிய மன்­றம் போன்­றவை கூறி­யுள்­ளன.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் இந்த ஆண்டு குறைந்­தது நான்கு நிலப்­ப­கு­தி­களை வழி­பாட்­டுத் தலங்­க­ளுக்கு ஒதுக்­கு­வ­தற்­காக அடை­யா­ளம் கண்டுள்­ளது.

அவற்­றில் இரண்டு, சீனக் கோயில்­க­ளுக்­கும் மற்ற இரண்டு, தேவா­ல­யங்­க­ளுக்­கும் ஒதுக்­கப்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.