சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான இரண்டு பாலங்களிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு காணப்படவேண்டி உள்ளதாக ஜோகூர் முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்து உள்ளார். போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் இடையறாது நடைபெற்று வருவதாகவும் அவர் கடந்த சனிக்கிழமை உற்பத்தி ஆலை ஒன்றின் திறப்பு விழாவில் கூறினார்.
"இரு நாடுகளின் எல்லையில் ஏற்படக்கூடிய நெரிசல் மிகவும் முக்கியமான பிரச்சினை. இருபது, முப்பது ஆண்டுகளாக இப்பிரச்சினை தொன்றுதொட்டு வருகிறது. புதிய முதல்வர் என்ற முறையில் இந்த ஆண்டுக்குள் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பதே எனது நோக்கமாக உள்ளது. அதனால்தான் விடியற்காலை 5 மணிக்குக்கூட சுல்தான் அபு பக்கார் மற்றும் சுல்தான் இஸ்கந்தார் குடிநுழைவு வளாகங்களில் மக்கள் அடிக்கடி என்னைக் காணமுடிகிறது," என்று அவர் தெரிவித்தார்.
ஜோகூர் மாநில முதல்வராக திரு ஓன் ஹஃபிஸ் கடந்த மார்ச் மாதம் பதவி ஏற்றார். அண்மையில் அவர் ஜோகூர் குடிநுழைவு சோதனைச் சாவடிக் கட்டடங்களில் சோதனை நடத்தினார். அப்போது சில கடப்பிதழ் அனுமதிக் கூடங்களில் பணியாளர்கள் இல்லாததைக் கண்டு அதுகுறித்து அதிகாரிகளிடம் அவர் வினவினார்.
அதன் பின்னர், உச்சநேரங்களில் கூட்டத்தைச் சமாளிக்கும் பொருட்டு குடிநுழைவுப் பணியாளர்களின் வேலைநேரங்களில் மாற்றம் செய்யப்பட்டது. அத்துடன், ஜோகூரின் பல வட்டாரங்களில் சாலைகளை மேம்படுத்துவதிலும் திரு ஓன் ஹஃபிஸ் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் சிங்கப்பூர் பாலங்களில் போக்குவரத்து நெரி சலைக் குறைப்பதிலும் அவரது கவனம் திரும்பியிருக்கிறது.

