'ஹெல்தியர் எஸ்ஜி' என்னும் சிங்கப்பூரின் முன்னெச்சரிக்கைப் பராமரிப்பு உத்தியின் கீழான திட்டத்தில் 24,000க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்ப மருத்துவருடன் பதிவு செய்துள்ளனர்.
இவர்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நோய்களை உடைய 40 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
"இந்த எண்ணிக்கை எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகம். அக்கறையுடன் வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து நோயாளிகள் பதிவுசெய்ய முன்வந்ததாக பொது மருத்துவர்கள் கூறினர்.
"முன்னெச்சரிக்கைப் பராமரிப்பு மற்றும் நோய்களை நிர்வகிப்பது தொடர்பான தகவல் நல்லமுறையில் தொடக்கத்திலேயே எதிரொலித்து உள்ளதாக நான் கருதுகிறேன்," என்றார் அமைச்சர்.
ஹெல்தியர் எஸ்ஜி நடவடிக்கையில் கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூரில் உள்ள சமூக சுகாதார உதவித் திட்ட மருந்தகங்கள் சேரத் தொடங்கின.
தற்போது வரை, அத்தகைய 1,200 மருந்தகங்களில் மூன்றில் இரண்டு, அதாவது 870 மருந்தகங்கள் இதில் சேர்ந்துள்ளன.
அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு குடியிருப்பாளர்களுக்கும் அவர்களின் குடும்ப மருத்துவர்களுக்கும் இடைப்பட்ட அர்ப்பணிப்பு மிக்க, நம்பிக்கையான உறவு முக்கியம் என்றார் திரு ஓங். அதுவே சிறந்த சுகாதாரத்தை உருவாக்குவதன் ஆரம்பப்புள்ளி என்றும் அவர் தெரிவித்தார்.
நொவினா ஸ்குவேரில் ஃபுல்லர்ட்டன் சுகாதாரக் குழுமத்தின் சுகாதாரப் பரிசோதனை நிலையத் திறப்பு நிகழ்வில் பங்கேற்று திரு ஓங் பேசினார்.
ஹெல்தியர் எஸ்ஜி நடவடிக்கை யின் சம்பிரதாயத் தொடக்கத்தை ஜூலை 5ல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார்.