மலேசிய பொழுதுபோக்கு பூங்காக்களில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக நீர்விளையாட்டு சார்ந்த பூங்காக்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு பள்ளி விடுமுறை மட்டும் காரணமல்ல.
தற்போதைய சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தப்புவதற்காக மலேசிய, சிங்கப்பூர் மக்கள் பொழுதுபோக்கு தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். பலவீனமடையும் மலேசிய ரிங்கிட்டும் சிங்கப்பூரர்களுக்குச் சாதகமாக உள்ளது.
மே மாத இறுதியில் சிங்கப்பூருக்கு எதிரான மலேசிய நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து பலவீனமடைந்து 3.4102க்குச் சரிந்தது. சிங்கப்பூரரான திரு வோங், 42, லெகோலேண்ட் நீர்விளையாட்டு பூங்காவுக்கு தனது இரண்டு பிள்ளைகளையும் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.
"ஜோகூர் மட்டுமல்லாமல் மலேசியாவின் இதர இடங்களுக்கும் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார் அவர். ஜோகூர் பயணத்துறை வழிகாட்டிகள் சங்கத்தின் தலைவர் ஜிம்மி லியோங், சிங்கப்பூருடனான இரண்டு குடிநுழைவு சோதனைச் சாவடிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளதால் ஜோகூர் பயணத்துறை வளர்ச்சி அடைவதாகக் கூறினார்.

