புதிய பசுமைத் திட்ட நிதி இருநாட்டு உறவுக்கு உரம்

புதிய பசுமைத் திட்ட நிதி இருநாட்டு உறவுக்கு உரம்

2 mins read
4f1f80be-9ed7-4bb1-8853-7cc461d4305d
-

சிங்கப்பூர்-ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பசுமைப் பொருள்கள், சேவை வழங்க S$17.8 மி.

சிங்­கப்­பூர்-ஆஸ்­தி­ரே­லிய உறவை மேலும் வலுப்­ப­டுத்த பல முயற்­சி­கள் இடம்­பெ­றும்.

பசுமை நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ர­வாக உத­வும் புதிய நிதி, மின்­னி­லக்க கடல் போக்­கு­வரத்து வழித்­த­டம், உணவு வர்த்­த­கத்­திற்கு ஊக்­க­ம­ளிக்­கும் திட்­டங்­கள் ஆகி­யவை அந்த முயற்­சி­களில் உள்­ள­டங்­கும்.

இரு நாடு­க­ளை­யும் சேர்ந்த சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் சேர்ந்து செயல்­பட்டு புதுப்­புது பசுமைப் பொருள்­களை உரு­வாக்­க­வும் சேவை­களை வழங்­க­வும் உத­வும் வகை­யில் A$20 மில்­லி­யன் (S$17.8 மில்­லி­யன்) நிதி தொடங்­கப்­பட்டுள்ளது.

எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பும் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் வெளி­யு­றவு வர்த்­த­கத் துறை­யும் அந்த நிதி­யைச் சரி­ச­ம­மாக வழங்­கும். இரு நாடு­க­ளை­யும் சேர்ந்த சிறிய, நடுத்­தர நிறு­வனங்­கள் அடுத்த நான்கு ஆண்­டு­க­ளுக்கு அந்த நிதி­யைப் பயன்­ப­டுத்­திக்கொள்­ள­லாம்.

சிங்­கப்­பூர்-ஆஸ்­தி­ரே­லியா பசுமை, மின்­னி­லக்க கப்­பல் போக்­கு­வ­ரத்து வழித்­த­டம் 2025ஆம் ஆண்டு முடி­வில் ஏற்­ப­டுத்­தப்­படும்.

கப்­பல் போக்­கு­வ­ரத்து தொழில்­து­றை­யில் கரி­மக்­கழிவை அகற்­று­வ­தும் அந்­தத் துறையை மின்­னி­லக்­க­ம­யப்­படுத்­து­வ­தும் நோக்­க­ம். இதன் தொடர்­பில் இருநாட்டு அதி­காரி­களும் சேர்ந்து செயல்­ப­டு­வர்.

புதிய திட்­டங்­கள் சிங்­கப்­பூர்-ஆஸ்­தி­ரே­லியா தலை­வர்­க­ளின் எட்­டா­வது ஆண்டு சந்­திப்புக் கூட்­டத்­தில் வெளி­யி­டப்­பட்­டன. அந்­தக் கூட்­டம் இஸ்­தா­னா­வில் நேற்று நடந்­தது.

சிங்­கப்­பூர்-ஆஸ்­தி­ரே­லியா பரந்த உத்­தி­பூர்வ பங்­கா­ளித்­துவ உடன்­பாட்­டின்­கீழ் இடம்­பெறும் இருதரப்பு தலை­வர்­களின் சந்­திப்பு ஏற்­பாட்­டின்­படி, இரு நாடு­க­ளின் பிர­த­மர்­கள் சந்­தித்து இரு தரப்பு ஒத்­து­ழைப்பு பற்றி விவா­திக்­கி­றார்­கள். வட்­டார, அனைத்­து­லக நில­வ­ரங்­கள் பற்றி அவர்­கள் கருத்­து­க­ளைப் பகிர்ந்­து­கொள்­கி­றார்­கள்.

ஆஸ்­தி­ரே­லிய பிர­தமர் ஆண்டனி அல்­பனீசும் தற் காலிக பிர­த­மர் லாரன்ஸ் வோங்­கும் நேற்று இஸ்­தா­னாவில் சந்தித்த­னர். பிறகு அவர்­கள் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னர்.

ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் மூன்று நாள் வருகை மேற்­கொண்டு சிங்­கப்­பூர் வந்­தி­ருக்­கிறார். அவர் நேற்று தொடங்­கிய 20வது ஷங்­ரிலா மாநாட்­டில் கலந்­து­கொண்டு பேசினார்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய தற்காலிகப் பிர­த­மர் திரு வோங், கரி­மக்­க­ழிவு இல்­லாத பசுமை எதிர்­கா­லத்தை உரு­வாக்­கு­வ­தி­லும் பொருள், சேவை விநி­யோ­கக் கட்­ட­மைப்­பின் மீள்­தி­றனைக் கட்­டிக்­காப்­ப­தி­லும் சிங்­கப்­பூ­ரும் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் தெள்­ளத்­தெ­ளி­வான நோக்­கங்­க­ளைக் கொண்­டி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

இரு நாடு­களும் இப்­படி சேர்ந்து செயல்­ப­டு­வ­தால் இரு தரப்­பு­க­ளை­யும் சேர்ந்த தனியார் துறை­கள் ஒத்­து­ழைக்க பல புதிய வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என்­றா­ர­வர்.

இதில் அர­சாங்­கங்­கள் மட்டும் சேர்ந்து செயல்­ப­டு­வது போதாது என்­றும் தனி­யார் துறை­க­ளின் பங்கு மிக முக்­கி­யம் என்­றும் அவர் கூறினார்.

சிங்­கப்­பூர்-ஆஸ்­தி­ரே­லியா பசு­மைப் பொரு­ளி­யல் உடன்­பாடு சென்ற ஆண்­டில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. அதன்­படி 17 கூட்டு முயற்­சி­கள் ஏற்­கெனவே அறி­விக்­கப்­பட்­டன.

இஸ்­தா­னா­வில் விவா­திக்­கப்­பட்ட புதிய செயல்திட்­டங்­கள் அந்­தக் கூட்டு முயற்­சி­க­ளுக்கு உறு­து­ணை­யாக இருக்­கும்.