தற்பொழுதே நற்பொழுது: சீனாவிற்கு அமெரிக்கா அழைப்பு

தற்பொழுதே நற்பொழுது: சீனாவிற்கு அமெரிக்கா அழைப்பு

2 mins read

இரு­நா­டு­க­ளுக்­கும் இடை­யி­லான பூசல்­க­ளைத் தீர்க்க சீனா­விற்கு அமெ­ரிக்கா மீண்­டும் பேச்­சு­வார்த்­தைக்கு அழைப்பு விடுத்­து உள்­ளது.

அமெ­ரிக்­கா­வு­டன் இணைந்து பொறுப்­புள்ள தற்­காப்­புத் தலை­வர்­க­ளாக நடந்­து­கொள்ள வேண்­டும் என்று அமெ­ரிக்­கத் தற்­காப்பு அமைச்­சர் லாய்டு ஆஸ்­டின் சீனாவை வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

"பொறுப்­புள்ள தற்­காப்­புத் தலை­வர்­க­ளைப் பொறுத்­த­மட்­டில், பேச்­சு­வார்த்­தைக்கு எப்­பொழு­தும் நற்­பொ­ழு­து­தான்," என்­றார் திரு ஆஸ்­டின்.

"எல்லா நேர­மும் பேச்­சு­வார்த்தை நடத்த சரி­யான நேரம்­தான். பேச்­சு­வார்த்­தைக்­குத் தற்­பொ­ழுதே நற்­பொ­ழுது. பேச்­சு­வார்த்தை என்­பது வெகு­ம­தி­யன்று. அது ஒரு தேவை," என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரில் நடந்­து­வ­ரும் ஷங்­ரிலா மாநாட்­டின் இரண்­டாம் நாளான நேற்று உரை­யாற்­றி­ய­போது திரு ஆஸ்­டின் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

வலு­வான தற்­காப்பு ஈடு­பாட்­டிற்­குச் சீனா தயா­ராக இல்­லா­தது குறித்­துக் கவ­லையை வெளிப்­ப­டுத்­திய அவர், நிலைமை விரை­வில் மாற­லாம் என்று நம்­பிக்கை தெரி­வித்­தார்.

"வல்­ல­ரசு நாடு­கள் என்­பவை, வெளிப்­ப­டைத்­தன்­மை­யின், பொறுப்­பு­டை­மை­யின் கலங்­கரை விளக்­க­மா­கத் திகழ வேண்­டும். அமெ­ரிக்கா தனது பங்கை ஆற்ற மிகுந்த கடப்­பாட்­டு­டன் உள்­ளது.

"இந்த வட்­டா­ரத்தை அமை­தி­யா­க­வும் செழிப்­பு­ட­னும் வைத்­தி­ருக்க வேண்­டும் என்­ப­தில் அமெ­ரிக்கா உறு­தி­யு­டன் உள்­ளது," என்று திரு ஆஸ்­டின் கூறி­னார்.

அமெ­ரிக்கா-சீனா இடை­யிலான பதற்­றத்­தைத் தணிக்­கும் வகை­யில், தக­வல் தொடர்பை வலுப்­ப­டுத்­து­வது உட்­பட இடர்­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் அழைப்பு விடுத்­துள்­ளார்.

ஆனால், தற்­காப்பு தொடர்­பில் இரு­த­ரப்­புப் பேச்­சு­வார்த்­தைக்கு அமெ­ரிக்கா விடுத்த அழைப்பை சீனா ஏற்க மறுத்­து­விட்­டது.

சீனத் தற்­காப்பு அமைச்­சர் ஜென­ரல் லீ ஷாங்­ஃபு­மீது விதிக்­கப்­பட்­டுள்ள தடை­களை அமெ­ரிக்கா விலக்­கிக்­கொள்­ளாத வரை­யி­லும் பேச்­சு­வார்த்தை இடம்­பெற வாய்ப்­பில்லை என்று மாநாட்­டில் கலந்­து­கொண்ட சீன அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இரு­த­ரப்­பும் சம­மான நிலை­யில் இருக்­கும்­போ­து­தான் பேச்சு­வார்த்தை நடத்­தப்­பட வேண்­டும் என்­றும் அதற்கு உகந்த சூழல்­களை உரு­வாக்க வேண்­டி­யது அமெ­ரிக்­கா­வின் கைகளில்­தான் இருக்­கிறது என்­றும் சீன அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தைவான் விவ­கா­ரத்­தால் அண்­மைக்­கா­ல­மாக இரு­நா­டு­களுக்­கும் இடை­யி­லான பதற்­ற­நிலை அதி­க­ரித்­துள்­ளது.

அமெ­ரிக்­கா­வி­லும் தைவா­னி­லும் உள்ள சில குழுக்­கள் தைவா­னைச் சுதந்­திர நாடாக அறி­விக்க முயல்­வ­தாக சீனா நம்­பு­கிறது.

ஆனால், தைவா­னுக்­குள் சீனா ஊடு­ரு­வுவ­தைத் தடுக்கும் நோக்கில் அத்­தீ­விற்கு ஆயு­தம் மட்­டுமே வழங்கி வரு­வ­தாக அமெ­ரிக்கா கூறு­கிறது.