2030ல் மின்னிலக்கப் பொருளியல் ஐந்து மடங்கு வளர்ச்சி காணும்
உலகில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் மின்னிலக்கப் பொருளியல் வாய்ப்புகள் நம்மை பெருமளவில் எதிர்நோக்கியுள்ளன என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
2030ஆம் ஆண்டுவாக்கில் தென்கிழக்கு ஆசியாவின் மின்னிலக்கப் பொருளியல் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு ஐந்து மடங்கு வளர்ச்சி அடையும் என எதிர் பார்க்கப்படுகிறது. இவ்வட்டாரத்தில் புதிய இணையப் பயனாளர்களும் நடுத்தர வகுப்பு மக்களும் அதிகரிப்பதால் இது சாத்தியமாகும் என்றார் அவர்.
செந்தோசாவில் நேற்று தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் 'ஏஷியா டெக் எக்ஸ் சிங்கப்பூர் 2023' மாநாட்டின் முதல் நாளான நேற்று துணைப் பிரதமர் வோங் பங்கேற்றுப் பேசினார்.
மின்னிலக்கப் பொருளியலுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இணையப் பாதுகாப்பு, இணையத் தொடர்பு, செயற்கை நுண்ணறிவு பயன்பாடு ஆகியவை கவனிக்கப்பட வேண்டிய முக்கிய மூன்று முன்னுரிமைகள் என்று அவர் வலியுறுத்தினார்.
தகவல் தொடர்புத் துறை (ஐசிடி), இதர துறைகளில் இடம்பெறும் மின்னிலக்கமயமாக்கல் ஆகியவற்றை உள்ளடக்கிய மின்னிலக்கப் பொருளியலின் வளர்ச்சி, 2022ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17% பங்கை வகிக்கிறது என்று தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மென்பொருள் உருவாக்கம், இணையச் சேவை ஆகியவற்றை உள்ளடக்கிய ஐசிடி துறை மட்டும் 2022ஆம் ஆண்டில் 8.6 விழுக்காடு வளர்ச்சி கண்டது. இது, ஒட்டு மொத்த பொருளியலில் 3.6 விழுக்காடு என்று ஆணையம் குறிப்பிட்டது.
ஆனால் பல சவால்கள் இருப்பதாக நிதியமைச்சருமான திரு வோங் மாநாட்டில் தெரிவித்தார்.
நாட்டுக்கு நாடு வேறுபடும் தரவுகளைக் கையாளும் விதிமுறைகள், வேலை வாய்ப்பு உத்தரவாதம், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டு நெறிமுறைகள் போன்ற வற்றை அவர் உதாரணமாக பட்டியலிட்டார்.
"இந்தப் பிரச்சினைகளை எல்லாம் எவ்வாறு நிர்வகிக்கப் போகிறோம் என்பதில்தான் இன்றைய மின்னிலக்கப் பொருளியலில் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. ஒரு நாடு மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் ஒருங்கிணைந்த அனுபவமும் அறிவும் வெற்றிக்கு வழிவகுக்கும்.
"சிங்கப்பூர், ஒன்றோடு ஒன்று நன்கு இணைக்கப்பட்ட, அனைத்தையும் உள்ள டக்கிய, நம்பகமான மின்னிலக்கப் பொருளி யலுக்கு பாடுபட வேண்டும்," என்று துணைப் பிரதமர் மேலும் கூறினார்.
உலகளாவிய தொழில்நுட்பப் பிரச்சினைகளை அலசி ஆராய உலக நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். எஸ்தோனிய பிரதமர் காஜா கல்லாஸ், நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ஆகியோரும் மாநாட்டில் உரை நிகழ்த்தினர்.