சிங்கப்பூர் குடும்பங்களின் நிதிநிலைமை மேம்பட்டுள்ளது
பணவீக்கமும் வட்டி விகிதமும் உயர்ந்துவரும் நிலையில், இவ்வாண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூர் குடும்பங்களின் நிதிநிலைமை மேம்பாடு கண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் ஒட்டுமொத்த குடும்பங்களின் நிகர மதிப்பு $2.6 டிரில்லியன் என்றும் கடந்த ஆண்டின் முதல் காலாண்டைவிட இது 8.2 விழுக்காடு அதிகம் என்றும் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.
இந்த வளர்ச்சி, சென்ற ஆண்டின் இறுதிக் காலாண்டைக் காட்டிலும் அதிகம். 2021 கடைசிக் காலாண்டை ஒப்பு நோக்க, 2022ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் குடும்பங்களின் நிகர மதிப்பு 6.7 விழுக்காடு கூடியிருந்தது.
இந்த வளர்ச்சி வேகமானது, கொவிட்-19 பரவலுக்கு முன்பு இருந்ததைவிட அதிகம் எனக் குறிப்பிட்டார் டிபிஎஸ் குழுமத்தின் பொருளியல் ஆய்வாளர் சுவா ஹான் டெங்.
2017-2019 காலகட்டத்தில் குடும்பங்களின் நிகர மதிப்பானது ஆண்டுக்கு ஆண்டு 6.9 விழுக்காடு என்ற விகிதத்தில் வளர்ச்சி கண்டது.
சொத்துகளின் மொத்த மதிப்பிலிருந்து கடன் பொறுப்புகளைக் கழிப்பதன்மூலம் பெறப்படுவதே நிகர மதிப்பாகக் கூறப்படுகிறது.
வங்கி வைப்புத்தொகை, பங்கு மதிப்புகள், ஆயுள் காப்புறுதி, மத்திய சேம நிதிச் சேமிப்புகள், வீடு உள்ளிட்டவை சொத்துகளாகக் கருதப்படுகின்றன. வீட்டுக் கடன், கடனட்டை மூலம் பெறப்படும் கடன்கள், கார் வாங்கியதற்கான கடன், வீடு புதுப்பிப்பு போன்றவை கடன் பொறுப்புகளாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
சென்ற ஆண்டின் முதல் மூன்று மாதங்களை ஒப்புநோக்க, இவ்வாண்டின் அதே காலகட்டத்தில் குடும்பங்களின் கடன் பொறுப்புகள் கூடவில்லை.
குடும்பங்களின் நிதிநிலை அறிக்கை நன்றாக இருந்துவரும் அதே வேளையில், பொருளியல் மந்தநிலை ஏற்படக்கூடும் என்றும் பலர் வேலைகளை இழக்கக்கூடும் என்றும் அத்தகைய சூழலில் சொத்துகளுக்கான கடன் தவணைகளைச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கலாம் என்றும் நிதி ஆலோசகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான குடும்பங்களுக்கு வீட்டுக்கடன் ஒரு பெரிய நிதிச் சுமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கடந்த 1999ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலிருந்து, குடும்பங்களின் கடன் பொறுப்புகளில் குறைந்தது 70 விழுக்காடாக இருப்பது வீட்டுக்கடன்தான் என்று புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குடும்பங்கள் அடுத்த ஈராண்டிற்குத் தங்களது வீட்டுக்கடன் தவணையைச் செலுத்துவதற்காக தங்களது ரொக்கச் சேமிப்புகளில் அல்லது விற்று ரொக்கமாக்கக்கூடிய சேமிப்புகளில் குறிப்பிட்ட அளவை ஒதுக்கி வைக்கும்படி டிபிஎஸ் வங்கியின் வைப்புத்தொகைகள், நிதித் தீர்வுகள் பிரிவின் தலைவர் பிராண்டன் லாம் அறிவுறுத்தியுள்ளார்.
குறைந்தது ஆறு மாதங்களுக்கு அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதற்கான நிதியையும் குடும்பங்கள் வைத்து இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிதிச் சிக்கலை எதிர்கொள்ளும் வீட்டு உரிமையாளர்களுக்கு உதவ நிதியுதவித் திட்டங்களும் உள்ளன.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் கடன் பெற்று, வீவக வீடு வாங்கியவர்கள் ஆறு மாதங்கள் வரையிலும் தங்களது கடன் தவணையைக் குறைக்கலாம் அல்லது கடன் தவணையைச் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளிப்போடலாம்.
தங்களது நிதி நிலைமை மேம்படும்வரை, அந்தக் கடன் நிலுவைத் தொகையையும் குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் தவணை முறையில் செலுத்த முடியும்.

