மனக்கவலை, மனச்சோர்வு ஆகியவற்றால் ஆண்டுதோறும் $16 பி. இழப்பு

மனக்கவலை, மனச்சோர்வு ஆகியவற்றால் ஆண்டுதோறும் $16 பி. இழப்பு

1 mins read
d754aa55-cda4-4730-bf43-02e33a1a67b1
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் மனக்கவலை (என்சையட்டி), மனச்சோர்வு ஆகியவற்றுக்கு ஆளாவோரால் ஆண்டுதோறும் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 16 பில்லியன் வெள்ளி இழப்பு ஏற்படுவது தெரிய வந்துள்ளது.

இந்தத் தொகை, சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.9 விழுக்காடாகும்.

டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பல்கலைக்கழகமும் மனநலக் கழகமும் இணைந்து நடத்திய கருத்தாய்வில் இந்த விவரம் இடம்பெற்றது.

இது, கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்குப் பிறகு சிங்கப்பூரில் பெரியவர்களிடையே மனக்கவலையும் மனச்சோர்வும் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அதனால் ஏற்படும் செலவையும் கணக்கிடும் முதல் கருத்தாய்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு ஏப்ரல், ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் 21 வயதைத் தாண்டிய 5,725 சிங்கப்பூரர்களைக் கொண்டு கருத்தாய்வு நடத்தப்பட்டது.

பிஎம்சி சைக்கயட்ரி மருத்துவச் சஞ்சிகை கருத்தாய்வின் முடிவுகளை சரிபார்த்தது.

மனக்கவலை, மனச்சோர்வு ஆகியவற்றின் அறிகுறிகள் இருக்கும் ஒருவருக்கான மருத்துவச் செலவு ஆண்டுதோறும் சராசரியாக 1,050 வெள்ளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்தாய்வில் பங்கேற்றோரில் 13 விழுக்காட்டினர் கடந்த ஆண்டு ஒருமுறையாவது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றதும் ஒன்பது விழுக்காட்டினர் ஒருமுறையாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் தெரிய வந்தது.