சிங்கப்பூர் முழுவதும் இயந்திர மனிதர்களை அனுப்ப காவல் துறை அதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு இயந்திர மனிதர்களை சுற்றுக் காவலில் ஈடுபடுத்த முடியும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த 'ரோபோக்கள்' 1.7 மீட்டர் உயரம் கொண்டவை. ஏதாவது சம்பவம் நடந்தால் அங்கு காவல் படையினர் வருவதற்கு முன்பு தடுப்புகளை ஏற்படுத்தவும் பொதுமக்களை எச்சரிக்கவும் இயந்திர மனிதர்கள் பயன்படுத்தப்படும்.
படக்கருவிகள், உணர்வுக் கருவிகள், ஒலிபெருக்கி, கணினித் திரை, ஒளிரும் விளக்குகள், எச்சரிக்கை ஒலி எழுப்பும் சாதனங்கள் போன்ற வசதிகளுடன் ரோபோக்கள் தன்னந்தனியாக சுற்றுக்காவலில் ஈடுபட முடியும். அதன் வழியாக காவல்துறையும் பொதுமக்களுடன் நேரடியாக உரையாட முடியும்.
ஏற்கெனவே இரண்டு ரோபோக்கள் சுற்றுக் காவலில் ஈடுபட்டு வருவதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் காவல் படை தெரிவித்தது.
ஏப்ரல் மாதத்திலிருந்து சாங்கி விமான நிலையம் முனையம் 4ல் அவை இரண்டும் கூடுதல் கண்களாக செயல்பட்டு வருகின்றன என்றது அறிக்கை.
2018 பிப்ரவரியில் சிங்கே அணிவகுப்பின்போது சோதனைகளின் ஒரு கட்டமாக காவல்துறை ரோபோக்கள் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டன.
அதன் பிறகு பலமுறை பெயர் மாற்றங்களைக் கண்டு உருமாறி, செயல்மாறி இன்றைய காவல்துறை ரோபோவாக அவை உருவாகியிருக்கின்றன.
ஆரம்பத்தில் பல்நோக்கு அனைத்து நிலப்பரப்பு தானியக்க ரோபோ என்ற பெயரை அவை கொண்டிருந்தன.
ஒவ்வொரு முறையும் ரோபோக்களில் புதிய அம்சங்கள் சேர்க்கப்படும்போது பண்டிகைக் காலத்தில் மரினா பே, சிங்கப்பூரில் கொள்ளைநோய் பரவிய ஆரம்பகாலத்தில் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகள் உள்ளிட்ட இடங்களில் சோதிக்கப்பட்டன. அவற்றில் பொருத்தப்பட்டுள்ள படக்கருவி 2.3 மீட்டர் வரை உயரே எழும்பி படம் பிடிக்கக்கூடியவை.
இந்தப் படக்கருவியும் மற்ற படக்கருவிகளும் சேர்ந்து 360 டிகிரியில் படம் பிடிக்க முடியும்.
நேற்று முனையம் 4ல் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் காவல் ரோபோக்களின் சுற்றுக்காவல் செயல்பாடுகள் பற்றி விளக்கப்பட்டது.