தங்கள் அக்கம்பக்கத்தில் காவல்துறை அதிகாரிகளை அவ்வப்போது குடியிருப்பாளர்கள் சந்திக்க புதிய திட்டம் ஒன்று வகைசெய்யும்.
ஜூன் முதல், தீவு முழுவதும் உள்ள 35 அக்கம்பக்க காவல் நிலையங்கள் பொதுமக்களை ஈடுபடுத்தும் முயற்சியைத் தீவிரப்படுத்துகின்றன.
அந்தந்த அக்கம்பக்கப் பேட்டைகளில் உள்ள உணவு, பானக் கடைகளில் 'காப்பி வித் ஏ காப்' நிகழ்வுகளுக்கு அவை ஏற்பாடு செய்யும். ஒவ்வோர் அமர்வும் இரண்டு மணி நேரம் நீடிக்கும்.
தத்தம் சமூக காவல் பிரிவைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளுடன் வரை குடியிருப்பாளர்கள் அளவளாவ முடியும். காப்பி அல்லது தேநீர் அருந்திக்கொண்டு எந்தத் தலைப்பு குறித்து வேண்டுமானாலும் அவர்கள் பேசலாம். குடியிருப்பாளர்கள் அருந்திய பானத்துக்கான கட்டணத்தை சிங்கப்பூர் காவல்துறை ஏற்கும்.
ஒன் பொங்கோலில் காவல்துறை சமூக சாலைக்காட்சியில் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் இத்திட்டத்தை நேற்று தொடங்கிவைத்தார்.
காவல்துறைக்கும் சமூகத்துக்கும் இடையேயான நம்பிக்கையின் அடிப்படையில்தான் உலகிலேயே ஆகப் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் விளங்குவதாக அவர் தெரிவித்தார்.
"காவல்துறைக்கும் சமூகத்துக்கும் இடையில் வலுவான உறவைக் கட்டிக்காப்பதற்கு தொடர் முயற்சி தேவை," என்றார் அவர்.
'காப்பி வித் ஏ காப்' நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம். இதில் குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரல் என எதுவும் கிடையாது.
"வசதியான ஒரு சூழலில் பொதுமக்கள் எங்களை எளிதில் அணுக தளம் ஏற்படுத்தித் தர நாங்கள் விரும்பினோம்.
"அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே கலந்துரையாடல்களை இடம்பெறச் செய்வதும் நம்பிக்கையை ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் இலக்கு," என்று காவல்துறையின் சமூகப் பங்காளித்துவத் துறை இயக்குநரான காவல்துறை உதவி ஆணையர் ஷங் யுன் சின் தெரிவித்தார்.
எடுத்துக்காட்டாக, உள்ளூரில் குற்ற நிலவரம் குறித்து குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் தகவல் கூறலாம்.
தங்கள் குடியிருப்புப் பகுதி குறித்த சந்தேகங்களைக் குடியிருப்பாளர்கள் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

