பள்ளி செல்லும் பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், அவர்களை பொதுவான ஓரிடத்தில் இருந்து ஏற்றிச் சென்று, அதேபோல பொதுவான ஓரிடத்தில் கொண்டு வந்துவிடும் ஏற்பாட்டை பெற்றோர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆனால், அத்தகைய பொதுவான இடத்திற்குத் தங்கள் பிள்ளைகள் சென்று வருவது பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே பெற்றோர் இந்த ஏற்பாட்டுக்கு இணங்குகிறார்கள்.
இதனிடையே, அத்தகைய ஓர் ஏற்பாட்டை பெற்றோர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று எதிர்பார்க்கும் பேருந்துச் சேவை நடத்துவோர், அந்த ஏற்பாடு நடப்புக்கு வருமா என்பதன் தொடர்பில் சந்தேகம் எழுப்பி இருக்கிறார்கள்.
கல்வி அமைச்சு இம்மாதம் 12ஆம் தேதி பல அறிவிப்புகளை விடுத்தது.
அவற்றில் பொது இட ஏற்பாடும் யோசனையாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஏற்பாடு தொடர்பில் பெற்றோரும் பேருந்து சேவை நிறுவனத்தாரும் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
மாணவர்கள் பேருந்தில் ஏறிச் செல்லவும் பேருந்தில் இருந்து இறங்கவும் ஒரு பொதுவான இடத்தைப் பயன்படுத்தினால் பயண நேரம் குறையும். நிறுவனங்களும் பெரிய பேருந்துகளைப் பயன்படுத்தலாம்.
இதனால் ஓட்டுநர் பற்றாக்குறைக்கு ஓரளவு தீர்வு காண முடியும். ஒவ்வொரு வழித்தடத்திலும் அதிக மாணவர்களுக்குச் சேவையாற்றவும் வழிபிறக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருந்தாலும் அத்தகைய பொதுவான இடங்களுக்குப் போக்குவரத்து சாலை சந்திப்புகளைக் கடந்து பிள்ளைகள் சென்று வரவேண்டி இருக்கும்.
இதனால், அவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதே பெற்றோரின் பொதுவான கவலையாக இருக்கிறது.
மாணவர்களை ஏற்றிச் செல்லக்கூடிய இடங்கள் கூரையுடன் கூடியதாக இருக்க வேண்டும் என்று சில பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள்.
வீட்டில் இருந்து அத்தகைய பொதுவான இடங்கள் எவ்வளவு தொலைவில் இருக்கலாம் என்பது பற்றி பெற்றோர் வெவ்வேறான கருத்துகளைத் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
வீட்டில் இருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் அத்தகைய இடம் இருப்பது நியாயமானதாக இருக்கும் என்று சிலர் கருதுகிறார்கள்.
வசதிக்காகவும் பிள்ளைகள் எத்தனை மணிக்கு வீடு வந்து சேர்வார்கள் என்பது தெரியும் என்பதாலும் பள்ளிப் பேருந்துச் சேவையைப் பணம் கொடுத்து தாங்கள் பயன்படுத்துவதாக இதர பெற்றோர் சுட்டிக்காட்டி தெரிவித்தனர்.
தனிப்பட்ட ஒவ்வோர் இடத்திற்கும் சென்று மாணவர்களை ஏற்றிக்கொள்ள சராசரியாக ஐந்து நிமிடங்கள் ஆகும் என்று பள்ளிப் பேருந்துச் சேவை வழங்குவோர் தெரிவிக்கிறார்கள்.
டோங் தார் டிரான்ஸ்போர்ட் சர்விசஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த பிலிப் பே என்பவர், பொதுவான இடங்களுக்குச் சில மாணவர்கள் சென்றுவர ஐந்து நிமிடங்களுக்கும் அதிக நேரம் பிடிக்கும் என்பதால் பெற்றோரில் சிலர் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே சில பெற்றோர் பல புகார்களைக் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், பொதுவான இடங்கள் வீட்டில் இருந்து அதிக தூரத்தில் இருக்கும்பட்சத்தில் பெற்றோருக்கு இந்தப் பொது இட ஏற்பாடு அவ்வளவாகப் பிடிக்காது என்று ரிவால்விங் டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிக்கலஸ் இங் கூறினார்.