பிரதமராகப் பொறுப்பேற்கவிற்கும் திரு லாரன்ஸ் வோங் தமது புதிய அமைச்சரவையை மே 13ஆம் தேதி அறிவித்தார். அதில் புதிய துணைப் பிரதமராக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் பதவி உயர்வு பெறுகிறார்.
திரு கான், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவராகவும் பிரதமர் அலுவலகத்தின்கீழ் செயல்படும் உத்திபூர்வக் குழுவுக்கும் பொறுப்பு வகிப்பார். திரு லாரன்ஸ் வோங் விடுப்பில் இருக்கும்போது தற்காலிகப் பிரதமராகவும் திரு கான் செயல்படுவார்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக மே 15ஆம் தேதி பொறுப்பேற்கும் திரு வோங், 51, நிதி அமைச்சராகத் தொடர்ந்து பணியாற்றுவார். அவர் அந்தப் பதவியில் 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் செயல்பட்டுவருகிறார்.
பிரதமர் லீ சியன் லூங் 2004ஆம் ஆண்டு பிரதமர் பதவி ஏற்றபோதும் மூன்று ஆண்டுகளுக்கு நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
மே 15ஆம் தேதி பொறுப்பேற்கும் புதிய அமைச்சரவையில் துணைப் பிரதமராக திரு ஹெங் சுவீ கியட் தொடர்வார்.
அமைச்சரவையை அமைப்பதில் தொடர்ச்சி, புதுப்பிப்பு என இரண்டையும் அரவணைத்ததாக துணைப் பிரதமர் வோங் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள திரு கான், துணைப் பிரதமர் ஹெங் இருவரும் அவரது இருபுறமும் அமர்ந்திருந்தனர்.
“இந்த அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவுறும் தருணமாக இருப்பதால் தொடர்ச்சியும் நிலைத்தன்மையும் முக்கியக் கூறுகள்,” என்று திரு வோங் சொன்னார்.
இருவரும் அனுபவமிக்க அமைச்சர்கள் என்றும் இந்தப் பதவி மாற்றக் காலத்தில் நிலையான வகையில் கைகோத்து செயல்படுவார்கள் என்றும் திரு வோங் விளக்கினார். தாம் புதிய பொறுப்பை ஏற்கும் நிலையில் அவர்களின் கருத்துகளையும் ஆற்றல்களையும் பயன்படுத்திகொள்வதுடன் அரசாங்கப் பொறுப்பில் இருக்கும் இளம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க உதவுவார்கள் என்று திரு வோங் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
துணைப் பிரதமர் வோங்கும் திரு கானும் இணைத் தலைவர்களாக கொவிட்-19 அமைச்சுகள் நிலைப் பணிக்குழுவை வழிநடத்தி சிங்கப்பூரை கொள்ளை நோய்ப் பரவல் சூழலிலிருந்து மீட்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“இருவரும் இணைந்து பணியாற்றியதன் விளைவாக, இருவரின் வேலை பாணிகளைப் பற்றி மேலும் அறிந்துவைத்துள்ளோம்,” என்றார் திரு வோங்.
உலகளவில் பதற்றநிலை அதிகரித்த காலகட்டமாகத் தற்போது இருக்கும்பட்சத்தில் அனைத்துலக பொருளாதாரத் துறையில் திரு கானுக்கு உள்ள அனுபவம், கடும் போட்டியுடனான உலகளாவிய சூழலைக் கடக்க உதவும் என்றார் திரு வோங்.
திரு வோங்குக்குப் பின் பேசிய திரு கான், 65, தாம் ‘4ஜி’ எனப்படும் மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைத் தலைமைத்துவக் குழுவை முற்றிலும் சார்ந்தவர் இல்லை என்றாலும் இந்த வாய்ப்புக் கிடைத்ததற்கு நன்றியுணர்வுடன் இருப்பதாகக் கூறினார்.
“புதிய பிரதமருக்கும் அவரது குழுவினருக்கும் என்னால் முடிந்தவரை ஆதரவு வழங்குவேன்,” என்றார் தொடர்ந்து வர்த்தக, தொழில் அமைச்சராகச் சேவையாற்ற இருக்கும் திரு கான். இந்தப் பொறுப்பில் தொடர்ந்து பொருளியல் அம்சங்களைக் கவனித்துவர உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மூத்த அமைச்சராகப் பொறுப்பு வகிக்க இருக்கும் பிரதமர் லீ, ஆய்வு, புத்தாக்க, தொழில்முனைப்பு மன்றத்தின் தலைவராகத் தொடர்ந்து செயலாற்றுவார்.
பெரும்பாலான அமைச்சரவைப் பொறுப்புகளில் மாற்றம் இல்லை.
இந்த அரசாங்கம் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்றால் இளம் ‘4ஜி’ அமைச்சர்களுக்கு வெவ்வேறு பொறுப்புகளைக் கொடுத்து, பரந்த அனுபவத்தை வழங்கவிருப்பதாகத் திரு வோங் தெரிவித்தார்.
“அவர்களுக்கு மத்தியில் சிலர் கூடுதல் பொறுப்பை ஏற்று மூத்த சகாக்களின் பொறுப்புகளை ஏற்கத் தயாராக இருப்பார்கள்,” என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அரசாங்கத்தின் பதவிக் காலம் முடிவடையும் தருணத்திலோ அதற்கு சற்று பிறகோ சிலர் ஓய்வுபெற இருப்பார்கள் என்பதால் புதியவர்கள் வரவேண்டும் என்று திரு வோங் கருத்துரைத்தார்.
சீரிய கவனத்துடன் புதிய வேட்பாளர்களை, குறிப்பாக அரசாங்கப் பதவியை ஏற்கக் கூடிய திறனுள்ளவர்களை அடையாளம் கண்டுவருவதாகக் கூறிய அவர், புதிய உறுப்பினர்களுடன் குழுவைப் புதுப்பித்து வலுப்படுத்த முனைகிறார். 30, 40 வயதுகளில் உள்ள ஆண், பெண்களை குழுவில் இணைக்க அவர் விரும்புகிறார்.
சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் சேவையாற்றக்கூடிய சிறந்த குழுவை அமைப்பதே தமது தலையாய நோக்கம் என்று திரு வோங் தெரிவித்தார்.
புதிய அமைச்சரவையில் திருவாட்டி லோ யென் லிங், திரு டெஸ்மண்ட் டான் இருவரும் பதவி உயர்வு பெற்று மூத்த துணை அமைச்சர்களாகின்றனர். அவர்கள் தற்போது சேவையாற்றும் அமைச்சுகளிலேயே, அதாவது வர்த்தக, தொழில் அமைச்சு, கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சுகளில் திருவாட்டி லோவும் பிரதமர் அலுவலகத்தில் திரு டானும் தொடர்ந்து செயலாற்றுவார்கள்.
மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம், 43, துணை அமைச்சராகப் பதவி உயர்வு பெறுகிறார். சட்ட அமைச்சிலிருந்து விலகி, தொடர்பு, தகவல் அமைச்சில் சேவையாற்றுவார். தொடர்ந்து சுகாதார அமைச்சிலும் பொறுப்பு வகிப்பார்.
இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க பொறுப்புகளை ஏற்கின்றனர்.
புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை, 56, சட்டம், போக்குவரத்து அமைச்சுகளுக்கு துணை அமைச்சராகப் பொறுப்பு ஏற்கவுள்ளார். அவர் ஜூலை மாதம் 1ஆம் தேதி பதவி ஏற்பார்.
ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் ஹுவாங், 41, கல்வி, நிதி அமைச்சுகளுக்கு மூத்த நாடாளுமன்றச் செயலாளராகப் பதவி ஏற்கிறார். அவர் மே மாதம் 24ஆம் தேதி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வார்.