கேரளாவில் பிறந்து இப்போது தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை நயன்தாரா.
மலையாளத்தில் ஒளிபரப்பான சின்னத்திரை நிகழ்ச்சிகள் சிலவற்றில் தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை நடிகை நயன்தாரா தொடங்கினார்.
“ஐயா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இன்று தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் அவர் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தமிழ் மொழியைத் தாண்டி தற்போது இந்தி திரைப்படங்களிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
ஜவான் திரைப்படத்தில் அவர் நடித்ததன் மூலமாக பெரும் புகழ்பெற்ற நடிகையாகப் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரட்டை ஆண் குழந்தைக்குத் தாயான அவர் குடும்பம் திரையுலகம் எனச் சுறுசுறுப்பாக இருந்து கொண்டிருக்கிறார்.
இதனிடையே திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் நயன்தாரா அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் தான் திரையுலகிற்கு வரவில்லை என்றால் தனது லட்சியத்தை நோக்கி பயணித்திருப்பேன் என கூறியிருக்கிறார்.
அதில் அவர், “ஒரு நாளும் நான் திரைத்துறையில் இவ்வளவு பெரிய உயரத்தை அடைவேன் என்று எண்ணியதில்லை. திரைப்படங்களில் நடிக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் நிச்சயமாக நான் கணக்காய்வாளராக ஆகி இருப்பேன்,” என்று அடிக்கடி அவருடைய உறவினர்கள் கூட சொல்வார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், நயன்தாராவின் சொத்து மதிப்பு 200 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய பெண் தொழிலதிபர்களின் நான்காவது இடத்தில் நயன்தாரா இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
திரையுலகில் நடிப்பதின் மூலம் தனக்கு வரும் வருமானங்களை நயன்தாரா வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். தேநீர் கடைகள் தொடங்கி பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை நயன்தாரா முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மேலும் நயன்தாரா தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதில் அதிக முக்கியத்துவம் காட்டக் கூடியவர் என்றும் அதனால்தான் அவரது திருமணக் காணொளிகளைக் கூட தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அதிக விலைக்கு விற்று இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

