தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) மாணவர் ஒருவர் சக மாணவரைத் தாக்கித் துன்புறுத்தும் காணொளி ஒன்று இணையத்தில் பரவலாக வலம் வந்ததை அடுத்து, தாக்கிய மாணவர் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாக ஐடிஇ தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை முடிவடைந்துவிட்டதாக ஐடிஇ அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்றுக் காலை பதிவிட்டிருந்தது.
கல்லூரி வளாகத்தில் இத்தகைய சம்பவங்கள் நடக்கும்போது தாக்குதல் நடத்தியவரை கல்லூரியிலிருந்து வெளியேற்றுவது வழக்கம் என்றும் கூறியது.
"சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்றும் இவர்கள் சமூகச் சேவை செய்வர் என்றும் பதிவில் குறிப்பிடப்பட்டது.
சமூக ஊடகங்களில் பரவலாக வலம் வந்த அந்த காணொளி, மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழகக் கழிவறை ஒன்றில் எடுக்கப்பட்டது. மாணவர் ஒருவரிடம் 'உனக்கு என்ன பிரச்சினை?' என்று கேட்டவாறு இன்னொரு மாணவர் அவரைப் பிடித்து வைத்துக் கேட்பதாக உள்ளது.
குறைந்தது மூவர் அருகில் நின்று நடப்பதை வேடிக்கை பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் ஓர் இளையர் கழிவறை வாசலை மறைத்தவாறு நின்றார்.
இதையடுத்து, குறிவைக்கப்பட்ட மாணவரின் முகக்கவசத்தைக் கிழித்து, அவரை அறைந்து, தகாத சொற்களைக் கூறுவதாக உள்ளது.
தாக்கப்பட்ட மாணவர் மன்னிப்பு கேட்பதாகவும் பின்னணியில் சிரிப்புச் சத்தம் கேட்பதாகவும் காணொளியில் அமைந்துள்ளது.
தாக்கப்பட்ட மாணவரின் தலை பின்னால் ஓர் அடி, காலின் பின் பகுதியில் ஓர் உதை எனத் தாக்குதல் தொடர்ந்தது.
காணொளி என்று எடுக்கப்பட்டது என்பது குறித்து அறியப்படவில்லை.
நேற்று முன்தினம் காணொளி தொடர்பில் அனைத்து மாணவர்களும் அடையாளம் காணப்பட்டதுடன் விசாரணை நடந்து முடியும் வரை ஒரு மாணவர் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
அதையடுத்து, அம்மாணவர் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்.

