இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் அனைத்துச் சிங்கப்பூரர்களுக்குமானது.
குடிமக்களின் விருப்பங்களையும் கருத்துகளையும் கருத்தில்கொண்டது என்று பிரதமர் லாரன்ஸ் வோங், செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) தெரிவித்தார்.
பிரதமராகத் தமது முதல் வரவுசெலவுத் திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வோங், நாட்டின் தற்போதைய நிதி நிலைமை, சமூகத்தை வலுவாகவும் ஒற்றுமையாகவும் வைத்திருக்க முனையும், முன்னேறும் சிங்கப்பூர்த் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்று கூறினார்.
எல்லாக் குடிமக்களுக்கும் $800 வரையிலான சிங்கப்பூரின் வைரவிழா (எஸ்ஜி60) பற்றுச்சீட்டு முதல் உதவிகள், மானியங்கள், வரிச்சலுகைகள் வரை குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் பல்வேறு ஆதரவு நடவடிக்கைகளை அவர் அறிவித்தார்.
குடும்பங்களுக்குக் கூடுதல் பயனீட்டுப் பற்றுச்சீட்டுகளும் பயனீட்டுக் கட்டணக் கழிவுகளும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு குடும்பமும் 2025ல் $760 வரையிலான பற்றுச்சீட்டுகளைப் பெறும்.
சிங்கப்பூரின் 60வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், 21 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட சிங்கப்பூரர்களுக்கு ஜூலை மாதத்தில் கூடுதலாக $600 மதிப்புள்ள எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பெறுவார்கள்; 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு $800 கிடைக்கும்.
இவ்வாண்டு முதன்முறையாக 60% தனிநபர் வருமான வரித் தள்ளுபடி, அதிகபட்சம் $200 வரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கான நிறுவன வருமான வரியில் 50% கழிவு, குறைந்தபட்சமாக $2,000 என்றும் அதிகபட்சமாக $40,000 வரையில் வழங்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
குறைந்த வருமான ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்தும் நிறுவனங்களுக்கான இணை நிதி அளவையும் அரசாங்கம் அதிகரிக்கும்.
இந்நடவடிக்கைகள், முந்தைய வரவுசெலவுத் திட்டங்களில் அறிவிக்கப்பட்டவற்றுடன் சேர்ந்து, அதிகரித்துவரும் செலவுகளின் தாக்கத்தையும் குறைக்கும் என்று கூறிய பிரதமர் வோங், “அதிகரிக்கும் விலைவாசியைச் சமாளிக்க சிறந்த வழி பொருளியலை வளர்ப்பதும், உற்பத்தித்திறனை அதிகரிப்பதுமே ஆகும். அதன்மூலம், சிங்கப்பூரர்களின் உண்மையான வருமானம் கூடும்; சிறந்த வாழ்க்கைத் தரங்களையும் அனுபவிக்க முடியும்,” என்றார்.
சிங்கப்பூரின் தலையாய பிரச்சினைகளில் ஒன்றான குறைந்து வரும் பிறப்புவிகிதத்தைச் சரிசெய்ய, அதிக பிள்ளைகள் பெறுவோருக்கு பல உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.
பிள்ளைகளுக்கான ‘லைஃப்எஸ்ஜி’ (LifeSG) சிறப்புத்தொகை, மூன்றும் அதற்கு மேலும் குழந்தைகள் பெறுவோருக்கு கூடுதல் குழந்தை மானியம், மெடிசேவ் நிரப்புதொகை போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. முழுநேரப் பிள்ளைப் பராமரிப்புக் கட்டணமும் குறைக்கப்படவுள்ளது. வைரவிழா ஆண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு அன்பளிப்பும் உண்டு.
நாட்டின் மற்றொரு பெரும் சவாலான மூப்படையும் சமூகத்தை துடிப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதுடன் அவர்கள் வேலை பார்க்கும் காலத்தை அதிகரிக்கவும் திட்டங்களை திரு வோங் அறிமுகப்படுத்தியுள்ளார்.
முதியோர் வேலை வாய்ப்பை அதிகரிக்க நிறுவனங்களுக்கு மானியம், முதியோருக்கான மசே நிதி பங்களிப்பு அதிகரிப்பு, சிங்கப்பூர் மக்களின் உடனடிக் கவலையான வீட்டுச் செலவினப் பிரச்சினை முதல் பருவநிலையில் சிங்கப்பூர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் வரை அனைத்தையும் சமாளிக்க வரவுசெலவுத் திட்டத்தில் உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உலக விமானப் போக்குவரத்து நடுவமாக சாங்கி விமான நிலையத்தை உயர்த்த அரசாங்கம் தீவிர முனைப்பு கொண்டுள்ளது. அதற்கேதுவாக, சாங்கி விமான நிலைய மேம்பாட்டு நிதிக்கு $5 பில்லியன் ஒதுக்கப்படவுள்ளது.
“வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல நாடு துணிச்சலான, உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்,” என்றார் திரு வோங்.
சிங்கப்பூரர்களுக்கான பட்ஜெட் இது, சிங்கப்பூரர்களால் வடிவமைக்கப்பட்ட பட்ஜெட் இது, அதோடு ஒருமித்த எதிர்காலத்திற்கு ஒவ்வொருவரும் பங்களிக்க உத்வேகம் தருவதாகவும் எவரும் பின்தங்கிவிடாமல் இருப்பதும் இந்த வரவுசெலவுத் திட்டத்தின் நோக்கம் என்று பிரதமர் தெரிவித்தார்.
“உலகப் பொருளியல் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், போட்டித்தன்மையுடன் இருக்கத் தவறினால் நாம் பின்தங்கிவிடுவோம்,” என்று அவர் சுட்டினார்.
வெளிச் சூழல்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வது சிங்கப்பூருக்கு இது முதன்முறையன்று எனக் குறிப்பிட்ட திரு வோங், சவால்கள் மிகுந்த பாதையாக இருந்தாலும் சிங்கப்பூர் நிலைத்தன்மை, நம்பிக்கை, அனைவருக்கும் வாய்ப்புகள் மிகுந்த இடமாக இருக்க முடியும் என்று நம்பிக்கையளித்தார்.
‘மேம்பட்ட எதிர்காலத்திற்கு ஒன்றிணைந்து முன்னேறுவோம்’ என்ற கருப்பொருளிலான வரவுசெலவுத் திட்டம், தற்போதைய சவால்களை எதிர்கொள்ளவும் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் நோக்கம் கொண்டுள்ளது.
வாழ்க்கைச் செலவின அழுத்தங்களைச் சமாளிக்கவும், வளர்ச்சி வாய்ப்புகளை முடுக்கிவிடவும், வாழ்க்கை முழுவதும் ஊழியர்கள் தக்க திறன்களைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதும், சிங்கப்பூர் நீடித்த நிலைத்தன்மை மிகுந்த நகரமாக தொடர்ந்து விளங்கச் செய்வதும், பரிவுமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தைப் பேணுவதும், ஒரே மக்களாக அனைவரையும் ஒன்றிணைக்க அறைகூவல் விடுப்பதும் வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்.
2025 நிதியாண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தின் மதிப்பு $143.1 பில்லியன் என்றும் அத்திட்டம் $6.8 பில்லியன் உபரியைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.