2023ல் சோதனையான தருணங்கள் காத்திருப்பதால் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: பிரதமர் லீ

2023ல் சோதனையான தருணங்கள் காத்திருப்பதால் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: பிரதமர் லீ

2 mins read
19d034ed-1fb4-4755-b93f-5044dfecd118
படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

2023ல் மேலும் சோதனையான தருணங்கள் எதிர்பார்க்கப்படுவதால், சிங்கப்பூர் ஒற்றுமையாக இருந்து வாய்ப்புகளைக் கைப்பற்ற வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் புத்தாண்டுச் செய்தியில் கூறியுள்ளார்.

ஆண்டிறுதி பயணப் பருவத்தின் தாக்கமும் சீனாவில் அண்மையில் கொவிட்-19 தொற்று அதிகரிப்பும் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவதாகச் சொன்ன அவர், இங்கு நிலவரம் தொடர்ந்து சீராக இருந்தால், எஞ்சிய கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்க சிங்கப்பூர் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

"2022ல் நாம் நன்றியுடன் இருப்பதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக கொவிட்-19 தொற்றை எதிர்கொண்ட பிறகு, நிலவரம் வழக்கத்திற்குத் திரும்புகிறது. அப்படி இருந்தும், கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன். இருவகை திறன் கொண்ட தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டு உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்," என்று பிரதமர் லீ கூறினார்.

அண்மையில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின்போது சாங்கி விமான நிலையம் உயிரோட்டத்துடன் செயல்படுவதைக் கண்டு மகிழ்ந்ததாகக் கூறிய அவர், சிங்கப்பூரின் மீட்சி விமான நிலையம், விமான நிறுவனம் ஆகியவற்றோடு ஹோட்டல்கள், கடைகள், உணவு பானத் துறை, சேவைத் துறை ஆகியவற்றுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

"ஷங்ரிலா உரையாடல், புளூம்பெர்க் புதிய பொருளியல் கருத்தரங்கு, 'எஃப்1' இரவு நேரக் கார்ப் பந்தயம் உள்ளிட்ட நேரடி நிகழ்ச்சிகள் சிங்கப்பூர் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதை உலகுக்கு உணர்த்தியுள்ளன. இருப்பினும் அனைவரும் இருதிறன் கொண்ட தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதை வலுவாக ஊக்குவிக்கிறேன்," என்றார் திரு லீ.

அனைத்துலகப் பயணங்களும் சீனாவில் பாதிப்பும் உயரும்வேளையில், கொவிட்-19 நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து பின்னர் இறுதிக்கட்டமாக கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போர் தொடர்கிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றம் தணிந்தபாடில்லை.

இந்நிலையில் நிச்சயமற்றதன்மையை எதிர்கொள்ள சிங்கப்பூர் தயாராக இருக்கவேண்டும் என்றார் திரு லீ. வர்த்தக, தொழில் அமைச்சு அடுத்த ஆண்டின் பொருளியல் வளர்ச்சி 0.5 விழுக்காடு முதல் 2.5 விழுக்காடாக மட்டுமே இருக்கும் என்று முன்னுரைத்துள்ளதை அவர் சுட்டினார்.

பொருள், சேவை வரி உயர்வின் தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் உதவுகிறது. சென்ற மாதம் ஏறக்குறைய மூன்று மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு $700 வரை ரொக்கம் வழங்கப்பட்டதைக் குறிப்பிட்ட அவர், உதவிகள் தொடரும் என்றார். இந்த வரி உயர்வின் மூலம் கிடைக்கும் தொகை சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புக்கு செலவிடப்படுமென்றார் திரு லீ.

வீடமைப்பு, குற்றவியல் சட்டத்தின் 377ஏ பிரிவை அகற்றியது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் பேசிய அவர், ஒன்றிணைந்து சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று வலியுறுத்தினார்.