தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் இரண்டாம் கட்ட துவக்கம்

2 mins read
074fa652-0077-4c46-9e81-f525d4e8a197
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் இருக்கும் பிரைட்ஹில் நிலையத்தை பார்வையிட்டார் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் இரண்டாம் கட்ட நிலையங்கள் அடுத்த மாதம் 28ஆம் தேதியிலிருந்து செயல்படத் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

ஸ்பிரிங்லீஃப், லெண்டோர், மேஃபிளவர், பிரைட்ஹில், அப்பர் தாம்சன், கெல்டிகோட் ஆகிய நிலையங்களை இந்தப் புதிய பாதை இணைக்கிறது.

"நமது தொழில்நுட்பர்கள், பொறியாளர்கள், இதர ஊழியர்கள் ஆகியோரின் கடுமையான உழைப்பு, தியாகங்கள் இன்றி இந்தப் பாதை தயாராகி இருக்காது," என்றார் அமைச்சர் ஈஸ்வரன்.

இந்த ரயில் பாதையின் திறப்பு தாமதமடைந்ததற்கு கொவிட்-19 நெருக்கடிநிலையும் ஒரு காரணமாக இருந்தது.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை 2ல் இரண்டு எம்ஆர்டி சந்திப்புகள் உள்ளன.

கெல்டிகோட் நிலையம் வட்ட ரயில் பாதையுடனும் பிரைட்ஹில் நிலையம் எதிர்கால குறுக்குத் தீவு நிலையத்துடனும் இணைக்கப்படும்.

ரயில் கட்டமைப்பின் மீள்திறனை தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை மேம்படுத்தும் என்று திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.

இன்னும் சில ஆண்டுகளில் இப்பாதை முழுமையாகச் செயல்படும்போது அது ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் ஐந்து ரயில் பாதைகளுடனும் திறக்கப்பட இருக்கும் குறுக்குத் தீவு ரயில் பாதையுடனும் இணைக்கப்படும்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை முழுமையானதும் 240,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெறும் பத்து நிமிட நடையில் நிலையத்தை அடைந்துவிடலாம் என்று திரு ஈஸ்வரன் கூறினார்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை 1, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை 2 ஆகியவற்றால் ஏறத்தாழ 100,000 குடும்பங்கள் பலன் அடையும் என்றார் அவர்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் முதற்கட்ட நிலையங்கள் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டன.

அப்பாதையில் உட்லண்ட்ஸ் நார்த்திலிருந்து உட்லண்ட்ஸ் சவுத் வரை மூன்று நிலையங்கள் உள்ளன.

புதிய கெல்டிகோட் நிலையம் சிங்கப்பூர் பார்வை குறைபாடு உள்ளோர் சங்கம், லைட்ஹவுஸ் பள்ளி ஆகியவற்றுக்கு மிக அருகில் இருப்பதாக கெல்டிகோட் நிலையத்தில் பேசிய அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

"பார்வை குறைபாடு உள்ள பயணிகளுக்குக் கூடுதல் உதவி வழங்கும் வகையில் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை நிலையங்களில் உள்ள மின்தூக்கி பொத்தான்கள் வெவ்வேறு வண்ணங்களில் இருக்கும்," என்றார் திரு ஈஸ்வரன்.

படிக்கட்டுகளின் கைப்பிடிகளில் விளக்குகள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நடமாட சிரமப்படும் மூத்தோருக்கும் பயணிகளுக்கும் நிலையத்தில் உள்ள தளமேடைகளில் சிறப்பு இருக்கைகளுக்கும் கைப்பிடிகளுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

43 கிலோமீட்டர் நீளமுள்ள தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் 32 நிலையங்கள் இருக்கும்.

துவக்கத்தில் அப்பாதையில் சராசரியாக 500,000 பேர் பயணம் செய்வர் என்றும் படிப்படியாக இந்த எண்ணிக்கை ஒரு மில்லியனாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.