தேசிய தின அணிவகுப்பு 2023 நிகழ்ச்சிகளை நேரடியாகக் காண விரும்புபவர்கள் மே 29 மதியம் முதல் விண்ணப்பிக்கலாம்.
தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் பாடாங்கில் நடக்கின்றன.
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம். மின்குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு வெள்ளிக்கிழமை (மே 26) தெரிவித்தது.
பொதுமக்கள் ஜூலை 22, ஜூலை 29 நடக்கும் முன்னோட்ட நிகழ்ச்சிகளை நேரில் காணவும் விண்ணப்பிக்கலாம்.
கிட்டத்தட்ட 27,000 பேர் பாடாங்கில் அமர்வதற்கான வசதி உள்ளது.
பொதுமக்கள் www.ndp.gov.sg என்னும் இணையப்பக்கம் மூலம் நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஜூன் 12 நண்பகலுக்குப் பிறகு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.
ஒவ்வொருவரும் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அவர்கள் இரண்டு, நான்கு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிப்போர் தங்களது சொந்த மின்னஞ்சலைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூன் 23 முதல் 28ஆம் தேதி வரை ndp2023@hapz.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தகவல் வழங்கப்படும்.
நுழைவுச்சீட்டுகள் தொடர்பான மோசடிகளை பொதுமக்கள் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதே நேரம் நுழைவுச்சீட்டுகளை விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 5, 6ஆம் தேதிகளில் பொதுமக்கள் வாணவேடிக்கைகள், விளையாட்டு நடவடிக்கைகள், கொண்டாட்ட நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவை ஐந்து குடியிருப்பு வட்டாரங்களில் இடம்பெறவுள்ளன.

