டிரேஸ்டுகெதர் கருவி திங்கட்கிழமை முதல் மீண்டும் விநியோகிக்கப்படும்

டிரேஸ்டுகெதர் கருவி திங்கட்கிழமை முதல் மீண்டும் விநியோகிக்கப்படும்

1 mins read
701dc72c-3fb6-460a-9f43-f222406c70fc
டிரேஸ்டுகெதர் கருவி விநியோகம் 38 சமூக மன்றங்களில் வரும் திங்கட்கிழமை (ஜனவரி 18ஆம் தேதி) முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 தொற்றுத் தொடர்புகளின் தடமறிய உதவும் டிரேஸ்டுகெதர் கருவி விநியோகம் 38 சமூக மன்றங்களில் வரும் திங்கட்கிழமை (ஜனவரி 18ஆம் தேதி) முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

குடியிருப்பாளர்கள் தங்களது அஞ்சல் குறியீட்டு எண்ணை 'https://token.gowhere.gov.sg' எனும் இணையத்தளத்தில் தட்டச்சு செய்து, தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சமூக மன்றத்தில் அக்கருவி விநியோகம் இடம்பெறுகிறதா எனத் தெரிந்துகொள்ளலாம்.

அதிகப்படியான தேவை இருந்ததால் அந்த 38 சமூக மன்றங்களும் டிரேஸ்டுகெதர் கருவி விநியோகத்தை இதற்கு முன்னதாக நிறுத்தி வைத்திருந்தன.

பட்டைக் குறியீடும் முகவரியும் அடங்கியுள்ள தங்களது உண்மையான அடையாள அட்டையைக் காட்டி குடியிருப்பாளர்கள் அந்தக் கருவியைப் பெற்றுக்கொள்ளலாம்.

அடையாள அட்டையில் முகவரி இல்லையெனில், பொதுப் பயனீட்டுக் கட்டணக் கடிதம் போன்ற தங்களது பெயரும் முகவரியும் அடங்கியுள்ள சான்று ஆவணங்களை குடியிருப்பாளர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.

தங்களது குடும்ப உறுப்பினர்கள் சார்பிலும் அதற்கு அவர்களின் அடையாள அட்டையைக் காட்டி, குடியிருப்பாளர்கள் டிரேஸ்டுகெதர் கருவிகளைப் பெற முடியும்.

'சேஃப்என்ட்ரி' (SafeEntry) வருகைப்பதிவிற்கு டிரேஸ்டுகெதர் கருவி அல்லது செயலியைப் பொதுமக்கள் பயன்படுத்தலாம்.

பழுதான அல்லது சேதமடைந்த கருவிகளைக் கட்டணமின்றி மாற்றிக்கொள்ளலாம். அதுபோல, கருவிகள் தொலைந்துபோனால் முதல்முறை மட்டும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.