கடந்த நீண்ட வாரயிறுதி முடிவில் சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகளில் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை

கடந்த நீண்ட வாரயிறுதி முடிவில் சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகளில் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை

1 mins read
7fac2d79-3344-4adb-b148-398326506b78
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் கடற்பாலத்தில் நிலவிய போக்குவரத்து நெரிசல். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடந்த நீண்ட வாரயிறுதியின் முடிவில் சிங்கப்பூர் தரைவழி எல்லை சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்பட்டதைவிட குறைவாக இருந்தது.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கும் பின்னிரவு 1 மணிக்கும் இடையிலான உச்சநேரத்தில் சிங்கப்பூருக்குத் திரும்புவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் முன்னதாக அறிவுறுத்தியிருந்தது.

மலேசியாவிலிருந்து உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சிங்கப்பூருக்கு வந்தோர், 20 முதல் 45 நிமிடங்களுக்குள் குடிநுழைவு நடைமுறையை நிறைவேற்றியதாகக் கூறினர்.

முன்னதாக, புனித வெள்ளி வாரயிறுதியில் 436,800க்கும் அதிகமான பயணிகள் சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகளைக் கடந்தனர். இம்முறை அதைவிட அதிகமான பயணிகள் எல்லைகளைக் கடப்பர் என எதிர்பார்க்கப்படுவதாக ஆணையம் கடந்த வாரம் கூறியிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 29), சனிக்கிழமை இரு நாள்களில் கிட்டத்தட்ட 280,000 பயணிகள் தரைவழி எல்லை வழியாக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் சென்றனர்.

மே தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்ததால், அதற்கு அடுத்த நாளான திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அமைந்தது. நேற்று செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள் என்பதால், நேற்றைய தினமும் பொது விடுமுறையாக இருந்தது.