சொல்லொணாத் துயரம்: இறந்த மகளின் கையை இறுகப் பற்றியிருக்கும் தந்தை

2 mins read
fedf6a4f-2866-49ba-ac5e-bfb2afaa15fc
தம் 15 வயது மகள் இறந்துவிட்டபோதும் அவள் தன்னைவிட்டுப் போகாமல் இருக்க அவரது கையை இறுகப்பற்றியபடி அமர்ந்திருக்கும் துருக்கியர் மெசுட் ஹன்சர். படம்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

காராமன்மராஸ் (துருக்கி): நிலநடுக்கம் ஏற்படுத்தியுள்ள துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாத தருணம்: தன் 15 வயது மகள் இறந்துபோன பின்னும் அவரது கையை விடாது பற்றியிருக்கிறார் அவரின் தந்தை. கான்கிரீட் பாளத்தின் அடியில் சிக்கியுள்ள அச்சிறுமியின் உடலில் அந்தக் கை மட்டுமே வெளியில் நீட்டிக்கொண்டுள்ளது.

சில நாள்களுக்குமுன் தமது வீடாக இருந்து, இப்போது சிதைவுக் குவியலாக இருக்கும் அவ்விடத்தில் உறைபனியிலும் தன்னந்தனி ஆளாக அமர்ந்து, தம் மகளின் கையைப் பற்றியபடியே இருந்த மெசுட் ஹன்சர் என்ற தந்தையின் பாசத்தைக் கண்டு உலகமே கண்ணீர் விடுகிறது.

ஹன்சரின் மகள் இர்மாக் இறந்துவிட்டாள். ஆனாலும், ஹன்சர் அவரை விடுவதாக இல்லை. இர்மாக் படுத்திருந்த மெத்தையில் வெளியில் தெரிந்த அவரது ஒரு கையை வருடியபடி இருக்கிறார் பாசக்கார தந்தை.

மீட்புக் குழுவினர் எவரும் இல்லை. உயிர்பிழைத்தவர்கள் இடிபாடுகளில் தங்களின் அன்புக்குரியவர்களைத் தேடியபடி இருந்தனர்.

இந்நிலையில், சலனமின்றி வெளிப்பட்டுக்கொண்டிருந்த அந்த துக்கத்தைத் தமது படக்கருவியில் பதிவுசெய்த மூத்த 'ஏஎஃப்பி' புகைப்படக்காரர் ஆடம் அல்தானால் அங்கிருந்து கண்ணை அகற்றவே முடியவில்லை.

60 மீட்டர் தொலைவிலிருந்து அல்தான் படம் பிடித்ததைக் கண்ட ஹன்சர், அவரை அழைத்து நடுங்கிய குரலில், "என் குழந்தையைப் படமெடுங்கள்," என்று சொன்னார்.

தம்முடைய, தம் நாட்டினுடைய துக்கத்தை உலகம் தெரிந்துகொள்ள விரும்பினார், தம் செயலால் அன்பு என்றால் என்னவென்று உலகிற்குக் காட்டிய அத்தந்தை.

'ஃபைனான்சியல் டைம்ஸ்', 'வால் ஸ்திரீட் ஜர்னல்' போன்ற உலகின் முன்னணிப் பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

"நான் படங்கள் எடுத்தபோதும் என்னைத் துயரம் அழுத்தியது. 'என்னவொரு பெரும் வேதனை' என்று என்னுள்ளேயே பலமுறை சொல்லிக்கொண்டேன். என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என்னால் பேசவே முடியவில்லை," என்று அல்தான் நினைவுகூர்ந்தார்.

ஹன்சரிடம் அவரது பெயரையும் அவருடைய மகளின் பெயரையும் கேட்டார் அவர்.

"பெரும் சிரமத்துடன் அவர் பெயர்களைச் சொன்னார். என்னால் அவரிடம் அதிகமாகப் பேச முடியவில்லை," என்றார் அல்தான்.

கடந்த திங்கட்கிழமையன்று அதிகாலையில் உலுக்கிய நிலநடுக்கத்தால் துருக்கியிலும் சிரியாவிலும் 21,000க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டனர்.