தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகக் கிண்ணம்: தற்காப்பு அரணாக நின்ற மொரோக்கோ போர்ச்சுகலை வெளியேற்றியது

3 mins read
0b3789aa-87f6-4531-9236-ad018b8ca672
மொரோக்கோ தரப்பில் கோல் போட்டு கொண்டாடும் யூசோஃப் என்-நெஸ்ரி. படம்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 3

கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோவின் வெற்றிப் பயணம் தொடர்கிறது.

அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் வலிட் ரெக்ராகி, வானத்தை நோக்கி இலக்கை நிர்ணயிக்குமாறு தம்முடைய வீரர்களிடம் கூறியிருந்தார். இப்போது உலகக் கிண்ணத்தையும் வெல்ல கனவு காணும்படி அவர் தைரியமாக கூறலாம்.

நேற்று சனிக்கிழமை இரவு நடந்த காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் 2016 ஐரோப்பிய வெற்றியாளரான போர்ச்சுகலை 1-0 எனும் கோல் கணக்கில் மொரோக்கோ தோற்கடித்து காற்பந்து உலகை தொடர்ந்து அசர வைத்துள்ளது.

இந்தப் போட்டியில் மொரோக்கோவின் வெற்றிப் பயணம் காலிறுதியுடன் நிறைவு பெற்றுவிடக்கூடும் என பலரும் நினைத்தனர். ஏனெனில், காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை 6-1 எனும் கோல் கணக்கில் பந்தாடியது போர்ச்சுகல்.

ஆனால், பலரது எதிர்பார்ப்புகளை முறியடித்து இப்போது அரையிறுதிச் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது மொரோக்கோ அணி.

சுவிட்சர்லாந்து உடனான ஆட்டத்தைப்போலவே இந்த ஆட்டத்திலும் போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் இடம்பெறவில்லை.

இந்த ஆட்டத்தில் போர்ச்சுகலின் கையே ஓங்கியது. இருப்பினும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மொரோக்கோ தன் பங்கிற்கு போர்ச்சுகல் கோட்டைக்குள் புகுந்து மிரட்டியது.

போர்ச்சுகலின் பல கோல் முயற்சிகளை மொரோக்கோ கோல்காப்பாளர் யாசின் பவ்னூ வெற்றிகரமாக முறியடித்தார்.

ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் முட்டுக் கட்டையை நீக்கினார் மொரோக்கோவின் யூசோஃப் என்-நெஸ்ரி. யஹ்யா அத்தியாத் அல்லாஹ் அனுப்பிய பந்தை உயரத் துள்ளிக் குதித்து தலையால் முட்டி வலைக்குள் புகுத்தினார் என்-நெஸ்ரி.

இடைவேளைக்குப் பிறகு கோல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போர்ச்சுகல், ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் ரொனால்டோவை களமிறக்கியது. கொன்சாலோ ராமோஸ் ஏற்கெனவே களத்தில் இருக்க, ரொனால்டோவும் சேர்ந்துகொண்ட போர்ச்சுகல் அணியினர் தாக்குதலைத் தீவிரப்படுத்தினர்.

ஆனால், தற்காப்பு அரணாக நின்ற மொரோக்கோ வீரர்களும் கோல்காப்பாளரும் தங்கள் வலைக்குள் பந்து புக அனுமதிக்கவில்லை. ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் மொரொக்கோவின் வலிட் செடிராவுக்கு தப்பாட்டம் காரணமாக இரண்டாவது மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அப்படி இருந்தும், மீள்திறனுடன் விளையாடிய மொரோக்கோ வீரர்கள் இறுதியில் வாகை சூடி போர்ச்சுகலுக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்தனர்.

ஃபிஃபா உலகத் தரவரிசை பட்டியலில் 22வது இடத்தில் உள்ள மொரோக்கோ, ஏற்கெனவே பெல்ஜியம், ஸ்பெயின் போன்ற முன்னணி அணிகளை வீழ்த்திவிட்டுதான் போட்டியில் இவ்வளவு தூரம் வந்திருக்கிறது. இப்போது தங்கள் பட்டியலில் 2016 ஐரோப்பிய வெற்றியாளரான போர்ச்சுகலையும் மொரோக்கோ சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த ஆட்டத்தை நேரில் காண நூற்றுக்கணக்கான மொரோக்கோ ரசிகர்கள் கத்தார் தலைநகர் தோஹாவிற்கு விமானப் பயணம் மேற்கொண்டனர்.

மொரோக்கோவின் தேசிய விமான நிறுவனமான ராயல் ஏர் மரோக், இதற்காக கூடுதலாக ஏழு விமானச் சேவைகளை வழங்கியது.

ஏற்கெனவே மொரோக்கோவாசிகள் பலர் கத்தாரில் வசித்து வருகின்றனர். ஆட்டத்திற்கு முன்பு அரங்கிற்குள் நுழைய ரசிகர் பட்டாளம் வரிசையில் காத்திருந்தனர்.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி அரபு நாடு ஒன்றில் நடைபெறுவது இதுவே முதன்முறை. இந்நிலையில், ஈராக் முதல் அல்ஜீரியா வரை பல அரபு நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மொரோக்கோவின் வெற்றியைத் தங்கள் வெற்றியைப்போல குதூகலத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை மொரோக்கோ பெற்றுள்ளது.