மலேசியாவில் மூவருக்கு வூஹான் கிருமி தொற்று, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருபவரின் உறவினர்கள்

2 mins read
1702ce5e-673e-4dd2-8635-1cb64b95970b
ஜோகூர் வழியாக மலேசியா சென்றபோது அந்த மூன்று சின நாட்டவரும் அங்கு மருத்துவமனையில் சோதிக்கப்பட்டு தனிமப்படுத்தப்பட்டனர். படம்: ஏஎப்பி -

மலேசியாவில் மூன்று பேருக்கு வூஹான் கொரோனா கிருமி தொற்றியிருப்பதை மலேசிய சுகாதார அமைச்சர் சுல்கிஃப்லி அகமது உறுதிப்படுத்தியுள்ளார். மலேசியாவில் வூஹான் கிருமி தொற்றியுள்ள நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. மூவரும் சீன நாட்டவர்கள்.

பாதிக்கப்பட்ட மூவரும் ஏற்கெனவே சிங்கப்பூரில் வூஹான் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட முதல் சீன ஆடவரின் உறவினர்கள். 66 வயது சீன நாட்டவர் ஒருவருக்கு அந்த பாதிப்பு இருப்பது இம்மாதம் 23ஆம் உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவருடைய 37 வயது மகனையும் 53 வயது பெண் ஒருவரையும் அந்தக் கிருமி தொற்றி இருந்ததைச் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு நேற்று (ஜனவரி 24) உறுதி செய்தது.

தற்போது மலேசியாவில் வூஹான் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த 66 வயது ஆடவரின் மனைவியும் பேரப்பிள்ளைகளும் ஆவர்.

அவர்கள் ஜோகூர் வழியாக மலேசியா சென்றபோது அங்கு மருத்துவமனையில் சோதிக்கப்பட்டு தனிமப்படுத்தப்பட்டனர். அம்மூவரும் தற்போது சிலாங்கூரில் உள்ள சுங்கை புலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட 66 வயது ஆடவர் கடந்த 20ஆம் தேதி இங்கு வந்தார். அவருடன் சேர்த்து மொத்தம் 9 பேர் சீனாவிலிருந்து விமானம் வழி சிங்கப்பூர் வந்தனர்.

பாதிக்கப்பட்ட ஆடவர், அவரது மனைவி, மகன், மருமகள், இரண்டு பேரப்பிள்ளைகள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கணவன், மனைவி, இரு பிள்ளைகள் அடங்கிய நால்வர் இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக 46 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 24 பேர் ஏற்கெனவே இங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர்.

"பாதிக்கப்பட்டவரிடமிருந்து 2 மீ. தொலைவிற்குள், கிட்டத்தட்ட அரை மணி நேரம் அல்லது அதற்கு அதிகமான நேரம் இருந்தவர்கள் நெருங்கிய தொடர்புகொண்டவர்களாகக் கருதப்படுவர்," என்றார் தொற்றுநோய்கள் பிரிவின் இயக்குநர் வெர்னன் லீ.

குறிப்புச் சொற்கள்