டாலின் (எஸ்டோனியா): பலதரப்புகள் ஒன்றுசேர்ந்து செயல்படும் போக்கு, அனைத்துலக சட்டத்தை நிலைநாட்டுவது ஆகிய கொள்கைகளுக்கு எதிராக உலகில் தற்போது எதிர்ப்பு இருந்து வருகிறது; இத்தகைய உலகில் சிங்கப்பூரைப் போல் ஐரோப்பாவும் இவ்விரு கொள்கைகளின் மதிப்பை அறிவதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் புதன்கிழமையன்று (ஜூன் 26) கூறினார்.
இந்த அம்சத்தில் ஒரே சிந்தனையைக் கொண்டிருப்பதால்தான் சிங்கப்பூருடன் உறவு வைத்துக்கொள்வதன் மதிப்பை ஐரோப்பிய நாடுகள் உணர்வதாகவும் சிங்கப்பூரும் அவற்றுடன் தொடர்ந்து அணுக்கமான தொடர்பில் இருக்கவேண்டும் என்றும் திரு தர்மன் குறிப்பிட்டார்.
அண்மையில் இத்தாலி, பின்லாந்து, எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டபோது இந்த அம்சம் தெள்ளத்தெளிவாகத் தெரிந்ததாக திரு தர்மன் சொன்னார். அந்நாடுகளின் தலைவர்கள், சிங்கப்பூரின் கண்ணோட்டங்களையும் சட்டம் தொடர்பில் சிங்கப்பூரின் நிலைப்பாட்டையும் பாராட்டியதாக அவர் சொன்னார்.
“உலக விவகாரங்களில் நமது கண்ணோட்டத்தை அவர்கள் மதிக்கின்றனர். பொருளியல் அம்சங்களில் பலதரப்புகள் சக்திவாய்ந்து இருக்கும் நிலை எழுவது, சீனாவும், தலைதூக்கும் உலகின் பல்வேறு பகுதிகளும் வளர்ச்சி காண்பது ஆகிய அம்சங்களுக்கு ஏற்றவாறு உலகம் எவ்வாறு உருவெடுக்கிறது என்பது அந்த விவகாரங்களில் அடங்கும்,” என்றார் திரு தர்மன்.
அவர்கள் சிங்கப்பூரின் கருத்துகளுக்கு செவி சாய்க்கின்றனர்; ஏதாவது ஒரு சக்திவாய்ந்த நாட்டின் பக்கம் மட்டும் நிற்காமல் பார்த்துக்கொள்ளும் எண்ணம் கொண்டுள்ளனர் என்று அவர் சுட்டினார்.
“சீனா உட்பட உலகின் முக்கிய வட்டாரங்கள் அனைத்துடனும் நெருங்கிய தொடர்புடன் இருப்பதை அவர்கள் விரும்புகின்றனர்,” என்றும் அவர் விவரித்தார்.
எஸ்டோனியாவின் இசை, கலாசார நிலையத்துக்கு நேரில் சென்றபோது செய்தியாளர்களிடம் பேசிய திரு தர்மன், பலதரப்புகள் ஒன்றுசேர்ந்து செயல்படும் போக்கு முன்பைப்போல் சீராகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும் அனைத்துலக சட்டத்துக்கு எதிர்ப்பு வருகிறது என்றும் விளக்கினார்.
இவ்வட்டாரத்தில் ஆட்சி சம்பந்தப்பட்ட நிலைமை எதிர்பாரா விதங்களில் மாற்றம் காணும்போதும் சிங்கப்பூர் ஐரோப்பாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவேண்டும் என்று அதிபர் தர்மன் குறிப்பிட்டார். பொருளியல் போட்டித்தன்மை தொடர்பில் ஐரோப்பாவும் மிக முக்கியமான விவகாரங்களைக் கையாள்வதாக அவர் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
இதுபோன்ற மாற்றங்கள் இடம்பெற்றாலும் பலதரப்பட்ட பொருளியல் உறவுகளை வைத்துக்கொள்வதன் தேவையையும் தொடர்பற்ற உலகை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவேண்டும் என்பதையும் ஐரோப்பா உணர்வதாக திரு தர்மன் எடுத்துச்சொன்னார்.
இம்மாதம் 22ஆம் தேதியன்று அதிபர் தர்மன் இத்தாலிக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார். பின்னர் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 25) அவர் எஸ்டோனியாவைச் சென்றடைந்தார்.

