1.2 மில்லியன் மலேசியர்கள் வறுமையில் வாழ்கின்றனர்: அமைச்சர்

1.2 மில்லியன் மலேசியர்கள் வறுமையில் வாழ்கின்றனர்: அமைச்சர்

2 mins read
8a45296b-1283-4689-8d03-eae2406a8427
மலேசியர் எவரும் கடுமையான வறுமையில் உழலவில்லை என்று அமைச்சர் முஸ்தபா சக்முத் கூறியுள்ளார். - கோப்புப்படம்: ஏஎஃப்பி

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் 1.2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இன்னும் வறுமையில் வாழ்வதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலக அமைச்சர் (சாபா, சரவாக் விவகாரங்கள்) முஸ்தபா சக்முத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2025 டிசம்பர் 31 நிலவரப்படி 1,204,995 மலேசியர்கள் வறுமையின் பிடியில் இருந்ததாகக் குடும்ப வருமான ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதவாக்கில் மலேசிய மக்கள்தொகை 34.3 மில்லியன் என்று புள்ளிவிவரத்துறை தெரிவிக்கிறது.

ஆக அதிகமாக சாபா மாநிலத்தில் 254,303 பேர் இன்னும் வறுமையிலிருந்து மீளவில்லை என்று அமைச்சர் முஸ்தபா குறிப்பிட்டார். கிளந்தான் (239,850), திரெங்கானு (117,159) மாநிலங்கள் அடுத்த ஈரிடங்களில் உள்ளன.

நெகிரி செம்பிலான் (29,591), மலாக்கா (25,647), கோலாலம்பூர் (17,885), லபுவான் (7,786), புத்ராஜெயா (75) ஆகியவை வறியவர்கள் குறைவாக உள்ள வட்டாரங்கள்.

சரவாக் (103,968), கெடா (91,768), பேராக் (79,455), சிலாங்கூர் (65,177), பாகாங் (47,837), பினாங்கு (44,852), பெர்லிஸ் (40,620), ஜோகூர் (39,022) ஆகிய மாநிலங்களிலும் குறிப்பித்தக்க எண்ணிக்கையிலான மக்கள் வறுமையின்கீழ் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும், மலேசியர் எவரும் கடுமையான வறுமையில் உழலவில்லை என்று திரு முஸ்தபா குறிப்பிட்டார்.

“குடும்பங்களின் தலைவிகித வருமானத்தின் அடிப்படையில் வறுமையானது வகைப்படுத்தப்படுகிறது. பொருளியல் அமைச்சு வகுத்துள்ள முறையின்படி அது கணக்கிடப்படுகிறது.

“இப்போதைய வறுமைக்கோட்டு வருமானத்தின் அடிப்படையில் கடுமையான வறுமைநிலை கணக்கிடப்படுகிறது. விலைவாசி, உணவு விலைகள், பணவீக்க விகிதம், இடம் சார்ந்த விலைகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில்கொண்டு அது அவ்வப்போது மறுஆய்வு செய்யப்படும்,” என்று அமைச்சர் விளக்கினார்.

கிளந்தானின் ஜெலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸகாரி கெச்சிக் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, ஜனவரி 29ஆம் தேதி திரு முஸ்தபா நாடாளுமன்றத்தில் எழுத்துவழி அளித்த பதிலில் இவ்விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்