கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கத்தின் கொள்கைகள், உதவிகள், பல்வேறு புதிய திட்டங்கள் குறித்த தகவல்களைப் பொதுமக்களிடையே பரந்த அளவில் கொண்டு சேர்க்கும் நோக்கில், மலேசியத் தகவல் துறை ‘இன்ஃபோ ஆன் வீல்ஸ்’ திட்டத்தை நாடு முழுவதும் 23,962 இடங்களில் அமல்படுத்தியுள்ளது.
இதன் மூலம், கடந்த ஜனவரி 1 முதல் செப்டம்பர் 23 வரை 1.65 மில்லியன் பேர் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து மக்களிடையே போதிய புரிதலை ஏற்படுத்தும் நோக்கில், அதே காலகட்டத்தில் 5,571 நேரடிச் சந்திப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன. இதில் மடானி சமூகத்தைச் சேர்ந்த 6,16,961 உறுப்பினர்கள் பங்கேற்றதாகத் தொடர்பு அமைச்சு கூறியது.
பல்வேறு தரப்பினரின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, நேரடி அணுகுமுறை, செய்தி ஒருங்கிணைப்பு, தகவல் வெளியீடுகள், மின்னிலக்கப் பரப்புரை மூலம் அரசாங்கம் இந்த விரிவான, அனைவரையும் உள்ளடக்கிய தொடர்பு உத்தியைச் செயல்படுத்தி வருகிறது.
கள அதிகாரிகளுக்குத் தேவையான 231 வழிகாட்டுதல்களும் கொள்கைக் குறிப்புகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.
மக்களுக்கான பொருளியல், ஆக்ககரமான தலைமைத்துவம், தேசிய ஒருமைப்பாடு, நிலையான சாதனைகள் என்ற நான்கு முக்கியக் கட்டமைப்புகளின்கீழ் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. அரசின் கொள்கை நன்மைகளை எளிய மொழியில் மக்களுக்கு விளக்குவதற்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மின்னிலக்க ஊடகங்கள் வாயிலாகத் தகவல்களைப் பரப்பும் முயற்சியாக, தகவல் துறையின் சமூக ஊடகப் பக்கங்களில் 9,294 பதிவுகள் பதிவேற்றப்பட்டன. அவற்றுள் 1,298 புத்தாக்கப் படைப்புகள் 16.51 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன.
மேலும், 50 தகவல் கையேடுகள், 35 செய்தி அறிக்கைகள், 4 சிறு புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஏற்பாடு செய்யப்பட்ட 68 கண்காட்சிகளை 162,900 பேர் பார்வையிட்டனர். தூதரகப் பங்காளிகள் மூலம் 4,000 விளம்பரத் திரைகளும் பயன்படுத்தப்பட்டன.
பொதுமக்கள் துல்லியமான தகவல்களைப் பெற்றுப் பயன்பெற ஒருங்கிணைந்த தொடர்பு வழிமுறைகள் தொடரும் என்று அமைச்சு நாடாளுமன்ற இணையப்பக்கத்தில் தெரிவித்தது.
