பாரிஸ்: பிறர் புகைப்பதைச் சுவாசிப்பதால் உலக அளவில் 2.7 பில்லியனுக்கும் அதிகமானோருக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2023ல் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் பேர் உயிரிழந்ததாக தி லான்செட் மருத்துவ சஞ்சிகையில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் பல்வேறு நோய்ப் பாதிப்புகள் ஏற்படுவதற்கு புகையிலைப் பயன்பாடே முக்கியக் காரணமாக விளங்குவதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. 2023ல் புகைபிடித்தல் தொடர்பான நோய்களால் உயிரிழந்த எட்டு மில்லியன் பேரில், புகைபிடிக்கும் பழக்கம் இல்லாவிடினும் பிறர் புகைத்ததைச் சுவாசித்ததால் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.
1990 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 204 நாடுகள், வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
2023ல் பிறர் புகைத்ததைச் சுவாசித்ததால் பாதிக்கப்பட்டவர்களில் பிறந்த குழந்தைகள் முதல் 14 வயது வரையுடைய 767 மில்லியன் சிறாரும் அடங்குவர்.
பிறர் புகைத்ததைச் சுவாசித்ததால் 1.66 மில்லியன் பேர் அகால மரணமடைந்தனர். அத்துடன், இதய தசைக்கு போதிய உயிர்வாயு செல்லாததால் ஏற்படும் இதய நோய் உள்ளிட்ட தீவிர பாதிப்புகளுக்கும் மக்கள் ஆளாகினர். குறிப்பாக, 2023ல் 5.2 மில்லியன் சிறார்க்கு சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
1990க்குப் பிறகு உலக அளவில் புகைப்பிடிப்போரின் விகிதம் கணிசமாகக் குறைந்தபோதிலும், மக்கள்தொகை அதிகரித்ததாலும் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் பிறர் புகைப்பதைச் சுவாசிப்பதாலும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறையாமல் நிலையாக உள்ளது.
பெண்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் குறைவாக உள்ள பகுதிகளில்கூட, பிறர் புகைப்பதைச் சுவாசிப்பதால் அவர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனினும், பெண்களின் ஆரோக்கியத்தில் இது பேராபத்தாகக் கருதப்படுவதில்லை.
எனவே, பெண்களையும் சிறாரையும் பாதுகாக்கும் வகையில், பொது இடங்களிலும் வீடுகளிலும் புகைபிடிப்பதற்குக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு அனைத்து நாட்டு அரசுகளுக்கு இந்த ஆய்வு கோரிக்கை விடுத்துள்ளது.


