சிட்னி: சூரிய மின்கலங்களை வாங்கவும் எரிசக்திச் செலவுகளைக் குறைக்கவும் உதவும் வகையில் ஆஸ்திரேலியக் குடும்பங்களுக்கு 2.3 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$1.89 பில்லியன்) நிதியுதவி வழங்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஆன்டனி அல்பனிஸ் உறுதியளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் மே 3ஆம் தேதி பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், எரிசக்திச் செலவுப் பிரச்சினை முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் அல்பனிஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இப்போது எதிர்க்கட்சியாகச் செயல்படும் பீட்டர் டட்டன் தலைமையிலான தாராளவாத கட்சிக்கும் இடையே கடும்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டில் எரிசக்திச் செலவுகளைக் குறைக்கும் விதமாக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அளவைக் குறைக்கச்சொல்லி, திரவ இயற்கை எரிவாயு உற்பத்தியாளர்களைக் கட்டாயப்படுத்துவேன் என டட்டன் பரப்புரை செய்துவருகிறார்.
இந்நிலையில், சூரிய மின்கல நிதியுதவி குறித்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) பிரதமர் அல்பனிஸ் அறிவித்துள்ளார்.
அதன்மூலம் குடும்பங்கள் கிட்டத்தட்ட 4,000 ஆஸ்திரேலிய டாலரைச் சேமிக்க இயலும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சூரிய மின்கலம் வீட்டிலேயே நிறுவப்பட்டு, சூரிய மின்தகடுகள் மூலம் பெறப்படும் மின்சாரம் அதில் சேமிக்கப்படும். தேவைப்படும் நேரத்தில் அந்த மின்சாரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்,” என்று ஓர் அறிக்கை வழியாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் தற்போது மூன்றில் ஒரு குடும்பம் சூரிய மின்தகடுகளைப் பொருத்தியுள்ளது என்றும் ஆனால், நாற்பதில் ஒரு குடும்பத்திடமே சூரிய மின்கலம் உள்ளது என்றும் அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

