வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இதுவரை இல்லாத அளவில் தேசியப் பாதுகாப்புக்கு 1.01 டிரில்லியன் டாலர் நிதியை ஒதுக்கப் பரிந்துரைக்கவிருக்கிறார்.
அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கும் நிதியாண்டை முன்னிட்டு அந்தப் பரிந்துரையை அவர் முன்வைக்கவிருப்பதாகத் தகவல் அறிந்த நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். அது தற்போதைய ஆண்டின் நிதியைவிட 13 விழுக்காடு அதிகம்.
கோல்டன் டோம் ஏவுகணைத் தற்காப்புத் திட்டம், கப்பல் கட்டுமானம், அணுவாயுத ஆற்றலைப் மேம்படுத்துதல், எல்லைப் பாதுகாப்பு ஆகியவற்றுக்குத் தற்காப்பு நிதி பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 3.8 விழுக்காட்டு ராணுவ ஊதிய உயர்வும் அடங்கும்.
செய்தியாளர்களிடம் பேசிய திரு டிரம்ப், வெளியில் தற்போது அதிகமான தீய சக்திகள் இருப்பதால் தற்காப்புக்குக் கூடுதல் நிதி ஒதுக்கும்படி கோரிக்கை விடுப்பதாக சொன்னார்.
“யாரும் இதற்கு முன் இப்படி ஒன்றை பார்த்ததில்லை,” என்ற அவர், “நமது ராணுவத்தை நாம் கட்டியெழுப்பவேண்டும்,” என்றார்.
இந்நிலையில், திரு டிரம்ப் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பிலிருந்து திரு மைக் வால்ட்சை நீக்கி ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான தூதராக அவரை நியமிக்கவிருக்கிறார்.
மேலும், தேசியப் பொது வானொலி, பொது ஒளிபரப்புச் சேவை ஆகியவற்றுக்கான நிதியைக் குறைக்க முற்படும் நிர்வாக உத்தரவிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்துப் போட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
நிதியை விநியோகம் செய்யும் பொது ஒளிபரப்புக்கான நிறுவனம், தேசியப் பொது வானொலி, பொது ஒளிபரப்புச் சேவை ஆகியவற்றுக்கு நேரடி நிதி வழங்குவதை நிறுத்தும்படி திரு டிரம்ப் கையெழுத்திட்ட உத்தரவு கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அது தேசியப் பொது வானொலி, பொது ஒளிபரப்புச் சேவை ஆகிய இரண்டையும் பாகுபாடானது என்றும் வகைப்படுத்துகிறது.
“பொது ஒளிபரப்பு நிறுவனம் தற்போதிருக்கும் நேரடி நிதியைச் சட்டத்தில் அனுமதிக்கப்படும் அதிகபட்ச அளவு வரை ரத்துசெய்ய வேண்டும். எதிர்கால நிதி வழங்குவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்,” என்று உத்தரவு தெரிவித்தது.
தங்களுக்கான நிதியைத் திரு டிரம்ப் குறைப்பது அத்தியாவசிய ஊடகச் சேவைகளுக்குத் தடங்கல் ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கர்கள் மீது பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தேசிய பொது வானொலி, பொது ஒளிபரப்புச் சேவை ஆகியன கூறின.
பாரபட்சமானவை என்று கூறி பல அமைப்புகளுக்கான நிதியைக் குறைக்க திரு டிரம்ப் நிர்வாகம் முயல்கிறது.

